இனி 'ஏ' படங்களை டிவியில் ஒளிபரப்ப முழுமையான தடை - 'பில்லா 2' பெரும் பாதிப்பு!

|

No Adult Films Be Aired Govt    | பில்லா 2  

சென்னை: ஏ படங்களை இனி டிவியில் ஒளிபரப்பக் கூடாது என மத்திய தணிக்கைக் குழு திடீர் தடை விதித்துவிட்டதால், பெரும் விலை கொடுத்து வாங்கப்பட்ட பில்லா 2, தி டர்ட்டி பிக்சர் போன்ற படங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முன்பு ஏ சான்றிதழ் பெற்ற படங்களை இரவு 12 மணிக்கு மேல் ஒளிபரப்ப அனுமதி அளித்திருந்தது மத்திய தணிக்கைக் குழு.

ஆனால் நேற்று புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி 'ஏ' சர்டிபிகேட் உள்ள படங்களை இனி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

அஜீத்தின் 'பில்லா-2' படம் 'ஏ' சர்டிபிகேட் பெற்ற படம். எனவே தணிக்கை குழு நடவடிக்கையால் பில்லா-2 படத்தை டி.வி.யில் ஒளிபரப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்தப் படத்தை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ள தொலைக்காட்சி நிறுவனம், பணத்தை திரும்பக் கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான 'த டர்டி பிக்சர்' இந்தி படத்தையும் டி.வி.யில் ஒளிபரப்ப ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை ரூ 20 கோடி வரை போனது நினைவிருக்கலாம்.

அமீர்கான் தயாரித்த டெல்லி பெல்லி மற்றும் கேங்ஸ் ஆப் வசேபூர் படங்கள் 'ஏ' சான்றிதழ் பெற்றவைதான். இனி அவற்றை ஒளிபரப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது

திரைப்படத்துறையினருக்கு டி.வி. உரிமை மூலம் பெருந்தொகை கிடைக்கிறது. கிட்டத்தட்ட 20 சதவீத வருவாய் டிவி மூலம்தான் கிடைத்து வருகிறது.

இந்த புதிய கட்டுப்பாட்டால் இனிமேல் 'ஏ' படங்களை சேனல்கள் வாங்க மறுத்து விடும். இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும்.

தணிக்கை குழுவின் புதிய விதிமுறைகளால் திரையுலகினர் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கோடம்பாக்கத்தில் சமீப காலமாக ஏ வகை படங்கள்தான் தயாராகி வருகின்றன. பாலிவுட்டில் கேட்கவே வேண்டாம்!

இனி இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்களினழ் முதல் நிபந்தனையே, ஏ மேட்டர் எதுவும் இல்லாம படம் எடுங்க, என்பதாகத்தான் இருக்கும்!!

 

Post a Comment