'ஏம்ப்பா... உங்களை நம்பி இறங்குனா இப்படியா மானத்தை வாங்கறது?' - விஜயலட்சுமியின் செல்லச் சிணுங்கல்

|

Actress Vijayalakshmi Kabbadi Promotions

ஜெயா தொலைக்காட்சியில் வருகிற ஆகஸ்ட் 15 ந் தேதி முதல் கலக்கல் கபடி கே.பி.எல் என்ற மாபெரும் விளையாட்டு நிகழ்ச்சியுடன் இணைந்த ரியாலிடி ஷோ ஒளிபரப்பாகவிருக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் கபடி அணியினர் உற்சாகத்தோடு கலந்து கொள்ளும் இந்த விளையாட்டு நிகழ்ச்சி சுமார் 120 வாரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது.

பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். அண்மையில் இந்த படப்பிடிப்பில் நடிகை விஜயலட்சுமி கலந்து கொண்டார்.

சென்னை 60028, அஞ்சாதே, சரோஜா, கற்றது களவு, ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்ற விஜயலட்சுமி தற்போது 'வனயுத்தம்' படத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி கேரக்டரில் நடித்து வருகிறார்.

கபடி பெண்கள் மத்தியில் கலகலவென பேச ஆரம்பித்த விஜயலட்சுமியை விடாமல் கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள் வீராங்கனைகள்.

ரஜினியுடன் சுல்தான் தி வாரியர் படத்தில் நடித்தது பற்றியும் அவர்கள் கேள்வி எழுப்ப, அதெல்லாம் சீக்ரெட். சொல்ல மாட்டேன் என்று நழுவினார் விஜயலட்சுமி. அந்த படம் எப்போது வரும்? வருமா வராதா? இன்னும் எத்தனை நாட்கள் ஷூட்டிங் இருக்கு என்று விடாமல் கேள்வி கேட்ட கபடி வீராங்கனைகளிடம் ஒருவழியாக சரணடைந்தார் விஜயலட்சுமி.

"நான் ரஜினி சாரோடு பக்கத்தில் நின்றதே பெரிய பாக்யமாக கருதுகிறேன். அவரோடு சில நாட்கள் நடிக்கவும் செய்திருக்கிறேன் என்றால் அது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்? மீண்டும் அழைப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதற்காகதான் நானும் காத்திருக்கிறேன்," என்றார் விஜயலட்சுமி.

இதற்கு முன்பு இதே போன்றதொரு படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை அஞ்சலியை கபடி ஆடச்சொல்லி அதில் வெற்றியும் கண்ட கபடிப் பெண்கள், விஜயலட்சுமியை மட்டும் விட்டு விடுவார்களா என்ன?

வலுக்கட்டாயமாக அவரை கபடி ஆட அழைத்தார்கள். கூந்தலை ஒதுக்கிக் கொண்டு கூலிங்கிளாசையும் இறுக்கி அணிந்து கொண்டு களத்தில் குதித்த விஜயலட்சுமியை அத்தனைபேரும் சேர்ந்து பிடித்து அமுக்க, அழாத குறையாக அவுட் ஆனார் அவர். ஏம்ப்பா... உங்களை நம்பி இறங்குனா இப்படிதான் மானத்தை வாங்கறதா? என்று செல்லமாக அவர்களிடம் கோபிக்கவும் செய்தார் விஜயலட்சுமி.

நடிகர் கார்த்தி, விவேக், அஞ்சலி, கஸ்து£ரி, என்று திரையுலகம் சார்பில் கபடிக்காக ஒத்துழைப்பு கொடுத்து வரும் இவர்களை கபடி வீரர்களும் வீராங்கனைகளும் கொண்டாடி வருகிறார்கள்.

நடிகர் நடிகைகள் கலந்து கொண்ட இந்த கலக்கல் கபடி கே.பி.எல் நிகழ்ச்சியின் சிறப்பு முன்னோட்டம் ஆகஸ்ட் 15 ந் தேதி சுதந்திர தினந்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இந்த போட்டி, தொடர் நிகழ்ச்சியாக ஒவ்வொரு வாரம் சனி கிழமை இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரையிலும், ஞாயிறன்று மதியம் 1.30 மணியிலிருந்து 2.30 மணி வரையிலும் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

நிகழ்ச்சி தயாரிப்பு- பைரவா கிரியேஷன்ஸ், ஜெயம் விஷன்ஸ்

 

Post a Comment