பைனான்சியரிடம் ரூ.90 லட்சம் மோசடி: நடிகை, தாயார் கைது, புழல் சிறையில் அடைப்பு

|

Actress Held Cheating Financier Rs 90 Lakh

சென்னை: திரைப்படம் தயாரித்து அதில் கிடைக்கும் லாபத்தில் பங்கு தருவதாக ஆசை வார்ததை காட்டி பைனான்சியர் ஒருவரிடம் ரூ.90 லட்சம் மோசடி செய்த நடிகை புவனேஸ்வரி, அவரது தாயார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் ரோட்டைச் சேர்ந்தவர் பிரகாஷ் (33). அவர் அம்பத்தூர் எஸ்டேட் 2வது மெயின் ரோட்டில் தர்சினி பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சினிமாக்காரர்களுக்கும் பைனான்ஸ் செய்து வருகிறார். இந்நிலையில் புரோக்கர் மூலம் சாலிகிராமத்தில் வசிக்கும் புதுமுக நடிகை புவனேஸ்வரி அவருக்கு அறிமுகம் ஆனார்.

கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகை புவனேஸ்வரியும், அவரது தாயார் சம்பூரணமும் சேர்ந்து பிரகாஷை சந்தித்து தாங்கள் 'கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்' என்ற படத்தை தயாரிக்கவிருப்பதாகத் தெரிவித்தனர். அந்த படத்தை தயாரிக்க ரூ.90 லட்சம் தேவைப்படுகிறது அதை கடனாகக் கொடுத்தால் படத்தின் லாபத்தில் அசலுடன் சேர்த்து பங்கு தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்.

மேலும் இந்த படத்தை முடித்துவிட்டு தாங்கள் தயாரிக்கவிருக்கும் அடுத்த படத்தில் பிரகாஷுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் பேச்சை நம்பி பிரகாஷ் பணம் கொடுக்க சம்மதித்தார். அதன்படி அவர் தாய், மகளிடம் எழுதி வாங்கிக் கொண்டு முதல் தவணையில் ரூ.50 லட்சமும், இரணாடவது தவணையில் ரூ.40 லட்சமும் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் படத்தை தயாரித்த புவனேஸ்வரி தானே நாயகியாகவும் நடித்தார். அண்மையில் அந்த படம் ரீலீஸ் ஆனது. ஆனால் பிரகாஷுக்கு அசலையும் கொடுக்கவில்லை, லாபத்தில் பங்கும் தரவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து பிரகாஷ் பணத்தை கேட்டுள்ளார். இதில் கடுப்பான புவனேஸ்வரியும், அவரது தாயும் சேர்ந்து பிராகஷுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து பிரகாஷ் சென்னை மேற்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் சங்கரிடம் இது குறித்து புகார் கொடுத்தார். அவரது புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சங்கர் அம்பத்தூர் எஸ்டேட் போலீசாருக்கு உத்தரவிட்டார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் நேற்று முன்தினம் மதியம் சாலிகிராமம் சென்று புவனேஸ்வரி மற்றும் அவரது தாயாரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Post a Comment