சென்னை: சினிமா தயாரிப்பாளர் பி.பி.ஜி.குமரன் நேற்று காலையில் வெடி குண்டு வீசியும் கடப்பாரையால் குத்தியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
33 வயதே ஆன குமரன் இளம் வயதிலேயே பல தொழில்களைத் தொடங்கி நடத்தி வந்தார். வைகை என்ற படத்தையும் தயாரித்தார். ஆரம்பத்தில் புரட்சி பாரதம் கட்சியில் சேர்ந்த அவர் பின்னர் அதில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார்.
பிறகு அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். ஆனால் சில நாட்களில் நீக்கப்பட்டார். இதனால் கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்.
தொழில்ரீதியாக குமரனுக்கும், குன்றத்தூர் வைரவன் என்பவருக்கும் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அரசியல் ரீதியாகவும் குமரனுக்கு எதிரிகள் இருந்தனர்.
சம்பவம் நடந்த திங்கள் காலையில் 2 கார்கள் முன்னே செல்ல, கடைசியாகத்தான் குமரனின் கார் சென்றது. ஆனால் கூலிப்படை கொலையாளிகள், பல நாட்களாக அவர் சென்று வந்த பாதையை நோட்டமிட்டு இக்கொலையை செய்துள்ளனர்.
குமரன் கொலை தொடர்பாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்ற ரவுடியை சம்பவ இடத்தில் மடக்கி விசாரித்ததில், மதுரையைச் சேர்ந்த கும்பலின் கொடூரத் திட்டம் இது என்பது தெரியவந்தது.
வைரவன் வேறு ஒரு வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்து வேலூர் சிறையில் உள்ளார். இவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வியாசர்பாடியைச் சேர்ந்த கவுஸ் பாஷா, குன்றத்தூரைச் சேர்ந்த கலைமணி, பெரம்பூரைச் சேர்ந்த சாம்சன் ஆகிய 3 பேர் நேற்று மாலை 6 மணி அளவில் எழும்பூர் 13-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கீதா முன்னிலையில் சரண் அடைந்தனர்.
அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை காவலில்எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Post a Comment