அரசு விழாவில் கரீனாகபூர் நடனமாட 1.40 கோடி செலவு… இது சட்டீஸ்கர் மாநில கூத்து

|

Kareena Kapoor Was Paid Rs 1 40 Crore   

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் அரசு விழாவில் நடனமாடிய நடிகை கரீனா கபூருக்கு 1.40 கோடி ரூபாய் செலவிடப்பட்ட சம்பவம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் உருவான ஆண்டு விழா கொண்டாட்டம் அண்மையில் சட்டீஸ்கர் அரசு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் நடனமாடுவதற்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து, பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரை அழைத்து வந்து ஆடவிட்டு ரசித்திருக்கின்றனர் அம்மாநில அதிகாரிகளும், அமைச்சர்களும். இந்த விழாவுக்கு மட்டும் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவானதாக செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

கரீனா கபூரின் நடன நிகழ்ச்சி, நயா ராய்ப்பூர் நகரில், நவம்பர் 1 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதில் கரீனா ஆடியது வெறும் எட்டு நிமிடங்கள் மட்டுமே. கரீனாவுக்கு அடுத்தபடியாக மேலும் 5 நட்சத்திரங்களுக்கும் அதிக தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர நடன கலைஞர்களுக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து செலவு 54 லட்சத்து 62,461 ரூபாயும், தங்குமிடம் மற்றும் உணவுக்காக 11 லட்சத்து 67,956 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டீஸ்கர் சட்டசபையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அம்மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பிரிஜ்மோகன், அரசு விழா நடன நிகழ்ச்சிக்கு கரீனா கபூர் உள்ளிட்ட 245 கலைஞர்கள் கலந்துகொண்டதாகவும், இதற்காக ரூ. 5 கோடியே 21 லட்சத்து 22,500 ரூபாய் செலவிடப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த 245 கலைஞர்களில் 42 பேர் வெளிமாநிலத்திலிருந்து அழைத்து வரப்பட்டதாகவும்,இதில் கரீனா கபூருக்குத்தான் மிக அதிகமாக ரூ.1 கோடியே 40 லட்சத்து 71,000 அன்பளிப்பாக வழங்கப்பட்டதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புத்தாண்டு பார்ட்டிகளில் சில நிமிடங்கள் நடனமாடும் நடிகைகளுக்குக்தான் கோடிகளில் கொட்டிக்கொடுப்பது வழக்கம். ஆனால் சட்டீஸ்கர் மாநிலத்தில் அரசு விழாவில் பாலிவுட் நடிகையின் குத்தாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதோடு அதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment