தமிழைக் கற்றுக் கொண்டு பாட வாருங்கள் - வேற்று மொழி பாடகர்களுக்கு வைரமுத்து அட்வைஸ்

|

Learn Tamil First Vairamuthu Advice To Non Tamil Singer

சென்னை: தமிழில் பாடவரும் வேறுமொழிக்காரர்கள் தமிழைக் கற்றுக் கொண்டு பாடவர வேண்டும் என்று இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசினார்.

கர்நாடக இசைப் பாடகி எஸ்.ஜே.ஜனனி இசையில் மகாகவி பாரதியாரின் வந்தே மாதரம் என்கிற இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த ஆல்பத்தை வைரமுத்து வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பெற்றுக் கொண்டார். விழாவில் வைரமுத்து பேசுகையில், "இத்தனை ஆண்டுகளுக்குப் பின், இத்தனை தலைமுறைகள் கடந்த பின்னும் பின்னும் பாரதி பாடல்களின் தணல் குறையாமல் இருக்கிறது. அதன் தேவை தீரவில்லை. பாரதியின் பாடல்களுக்கு எத்தனையோ பேர் இசையமைத்துள்ளார்கள்.

ஜி.ராமநாதன், சி.எஸ்.ஜெயரமன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், எல்.வைத்யநாதன் என எத்தனையோ பேர் இசை வழங்கியுள்ளார்கள். தமிழ் பாடல் பாடும் அத்தனை பேரும் பாரதியின் பாடல்களைப் பாடியிருகிறார்கள்.

இவர்கள் அத்தனை பேரையும் கடந்துவிட்டு பாரதி வரிகள் இன்னும் நிற்கின்றன. இங்கே ஜனனி என்கிற இளங்கொழுந்து தன் திறமையால் - தன் அர்பணிப்பால் பாரதியின் வரிகளை மேற்கத்திய இசை கலந்து நவீனப்படுத்தியிருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

பாரதியின் வரிகள் இளைஞர்களைச் சென்றடையும் வகையில் அவர்களுக்கு பிடித்த இசையின் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார். இதற்காக ஜனனி பாரதிக்கு கடமைப்பட்டிருக்கிறார். பாரதியும் ஜனனிக்குக் கடமைப் பட்டிருக்கிறார்.

இந்த ஜனனி சிறுமியல்ல பாரதி பாடியது போல இது அக்கினிக் குஞ்சு. நெருப்பில் பெரிது சிறிது இல்லை. நெருப்பு என்றால் சுடவே செய்யும் பிரித்தாலும் தங்கத்தின் மூலக்கூறு தங்கமாகவே வரும். நெருப்பின் கடைசி மூலக்கூறும் நெருப்பாகவே இருக்கும். இந்த ஜனனி சிறுமி என்றாலும் அக்கினி குஞ்சாக இருக்கிறாள்.

இந்த இசைப் பேழையில் மேற்கத்திய இசையின் கலப்பு இருக்கிறது. தோசை பீசா ஆனது மாதிரியான மாற்றம் இது. தோசை பீசா இரண்டுமே வட்டமாக இருப்பதுதானே. காலத்திற்கு ஏற்ப வேறு வழியில்லாமல் ஜனனி பீசா செய்துள்ளார். இதற்காகப் பாடிய எஸ்.பி.பி, வரிகளில் புரியாத சொல்லுக்கு என்னிடம் பொருள் கேட்டார். அவர் தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் பேசினாலும் பொருள் புரியாமல் பாடமாட்டார்.

வேற்று மொழிக்காரர்கள் தமிழ் கடந்து வருகிறார்கள். தமிழக் கற்றுக் கொண்டு வந்து பாடட்டும். தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள். எஸ்.ஜானகியின் தாய்மொழி தெலுங்கு, பி.சுசீலாவின் தாய்மொழி தெலுங்கு, ஜேசுதாஸ் தாய்மொழி மலையாளம், பி.பீ.ஸ்ரீநிவாஸின் தாய்மொழி கன்னடம். ஆனால் எல்லாரும் தமிழைக் கற்றுக் கொண்டு பாடினார்கள். யார் வேண்டுமானாலும் தமிழைக் கற்றுக் கொண்டு பாடட்டும் மொழியைச் சிதைக்காமல் போனால் வணக்கம். இல்லையென்றால் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

கர்நாடக இசைக் கலைஞர்கள் திரைப்படத்தில் பாடுவது பாவமல்ல. எம்.எஸ். அம்மா காற்றினிலே வரும் கீதம் பாடவில்லையா? எம்.எஸ்.வசந்தகுமாரி பாடவில்லையா? ஜனனியை 2013ல் திரைப்படத்தில் பாட வைப்பதாக இருக்கிறேன். நல்ல பாட்டாக அவரது குறிக்கோள், கௌரவம் கெடாத வகையில் பாட வாய்ப்பு வரும். தயாரிப்பாளர் தாணுவும் வாய்ப்பு தந்து உதவலாம். நண்பர்களிடம் கூறலாம்," என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் காஸ்மிக் மியூசிக் முரளி அனைவரையும் வர வேற்றார். பாஜக தலைவர் இல.கணேசன், டி.என்.பி.எஸ்.சி.தலைவர் ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ், கலைபுலி எஸ்.தாணு, தூர்தர்ஷன் துணை இயக்குநர் எஸ்.மேகநாதன் ஆகியோரும் பேசினர். இரா.சங்கர் கணேஷ் நன்றி கூறினார்.

 

Post a Comment