சென்னை: விஸ்வரூபம் படத்தை இந்தியில் வெளியிட இன்று மும்பை செல்கிறார் கமல்ஹாஸன்.
விஸ்வரூபம் படத்துக்கு தடைமேல் தடை, தமிழக அரசுடன் மோதல், தொடர்ந்து இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து வெளியேறப் போவதாக கமல் மிரட்டல் என பல்வேறு விறு விறு காட்சிகள் நேற்று முழுவதும் அரங்கேறின.
பின்னர் மாலையில் தன் அலுவலகம் எதிரில் திரண்டிருந்த ரசிகர்களுடன் பேசினார் கமல்ஹாஸன்.
அவர் கூறுகையில், ‘மும்பைக்கு சென்று வெற்றிகரமாக திரும்பி வருவேன். அதுவரை அமைதி காக்க வேண்டும். உங்களை நம்பித்தான் மும்பைக்கு செல்கிறேன்' என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியில் விஸ்வரூப் என்ற பெயரில் இந்தப் படம் தயாராகியுள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி அங்கு இந்தப் படம் வெளியாகிறது. அடுத்த நாளே டிடிஎச்சில் வெளியாகும் என கமல் கூறியிருந்தார். அது சாத்தியமா என்று தெரியவில்லை.
இந்தியிலும் கமலுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. அங்கே பிவிஆர் தியேட்டர் குழுமத்துடன் கமலுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வட இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இவர்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடுவதாக கமல் அறிவித்த உடனே, ஒரு தியேட்டர் கூட தரமாட்டோம் என பிவிஆர் குழுமம் அறிவித்துவிட்டது நினைவிருக்கலாம்.
Post a Comment