சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில் கமல்ஹாசனுடன் பேச்சு நடத்த அரசே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் கமல்-இஸ்லாமிய கூட்டமைப்பு- அரசு என்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் 24 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் கமலும் இஸ்லாமியக் கூட்டமைப்பினரும் சேர்ந்து பேசி பிரச்சனைத் தீர்க்க முயன்றால், அதற்கு அரசு உதவும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இந்தக் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா எம்எல்ஏ,
இந்தப் பிரச்சனையில் முதல்வர் இன்று தெரிவித்த கருத்துக்களை வரவேற்கிறோம். இதற்காக அவருக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வரின் அறிவுறுத்தலின்படி கமலுடன் பேச்சு நடத்தத் தயாராக உள்ளோம்.
இதில் அரசுத் தரப்பும் பங்கேற்க வேண்டும் என்று கருதுகிறோம். இது முத்தரப்புப் பேச்சுவார்த்தையாக அமைய வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களது இந்தக் கருத்தை அரசிடம் தெரிவிப்போம். அதன் பின்னர் பேச்சுவார்த்தை குறித்து முடிவு செய்யப்படும்.
இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். நாங்கள் இதை அரசியலாக்க முயலவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக சமீபத்தில் கமல் எங்களுடன் பேசவில்லை, மீடியாவில் தான் பேசினார் என்றார்.
அமீரும் முயற்சி...
முன்னதாக இயக்குனர் அமீர் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, சரியான நேரத்தில் விஸ்வரூபம் பிரச்னையில் தலையிட்டு ஒரு சுமூக முடிவு ஏற்பட வழி செய்து கொடுத்துள்ளார். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய அமைப்பினர் அனைவரையும் அழைத்து பேச்சு நடத்தப் போகிறோம். எந்த இடத்தில் பேச்சு நடக்கும் என பின்னர் சொல்கிறேன். கமல் வந்ததும் இந்த பேச்சு மற்றும் காட்சி நீக்கங்களை முடிவு செய்துவிடுவோம்," என்றார்.
Post a Comment