ரூ.100 கோடியைத் தாண்டிவிட்டதா விஸ்வரூபம் வசூல்?

|

Is Viswaroopam Crosses Rs 100 Cr Bo

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் ரூ 100 கோடியைத் தாண்டி வசூலித்துவிட்டதாக சிலர் செய்தி பரப்பி வருகின்றனர். ஆனால் இதனை பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

முஸ்லிம்கள் எதிர்ப்பு, பல்வேறு தடைகள், பிரச்சினைகள் காரணமாக விஸ்வரூபம் படம் தெலுங்கு மற்றும் இந்தியில் மட்டும் வெளியானது. வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்கள் சிலவற்றிலும் மட்டும் தமிழில் வெளியானது.

இதில் வெளிநாடுகளில் இதுவரை கமல் படம் எதுவும் வசூலிக்காத அளவுக்கு நல்ல வசூல் பார்த்துள்ளது விஸ்வரூபம். பிரிட்டனில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியில் இந்தப் படத்துக்கு பெரிய ஓபனிக் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த நாட்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை ரூ 11 கோடியை இந்தியில் வசூலித்துள்ளது விஸ்வரூபம். இது பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் படு சுமாரான தொகைதான். ஆனால் கமல் பட வரலாற்றில் அதிகபட்ச கலெக்ஷன் எனலாம்.

தடைகளைக் கடந்து தமிழகத்தில் வெளியான விஸ்வரூபத்துக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக நகரப் பகுதிகளில் நல்ல கூட்டம். கிராமம் சார்ந்த திரையரங்குகளில் நான்காம் நாளிலிருந்து குறைய ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் விஸ்வரூபம் படத்தின் வசூல் ரூ 120 கோடியைத் தாண்டிவிட்டதாக சிலரும், ரூ 100 கோடியை எட்டிவிட்டதாக சிலரும் செய்தி பரப்பி வருகின்றனர்.

இதற்கெல்லாம் விடையளிக்கும் விதமாக கமல் சமீபத்தில் பேசுகையில், "விஸ்வரூபம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது உண்மைதான். ஆனால் இன்னும் சில தினங்கள் போன பிறகுதான், நான் என்னுடைய ரூ 100 கோடியை எடுக்க முடியும் என நினைக்கிறேன்," என்றார்.

 

Post a Comment