பாரதிராஜா பேச்சு பைத்தியக்காரனின் பேச்சு...! - கொதிக்கும் இளையராஜா

|

Ilayaraaja Blasts Bharathiraja

இளையராஜா - பாரதிராஜா உரசல், அரசல் புரசலாக இருந்தது போய்... வெளிப்படையாகவே வெடித்துவிட்டது.

அன்னக்கொடியும் கொடிவீரனும் இசை வெளியீட்டு விழாவுக்கு தன்னை வலுக்கட்டாயமாகக் கூப்பிட்டு மேடையில் அவமதித்துவிட்டார் பாரதிராஜா என இளையராஜா குமுறியுள்ளார்.

குமுதம் இதழில் வாசகர் ஒருவர் "மதுரையில் உங்கள் நண்பர் பாரதிராஜாவின் பட விழாவில் அவர் இப்போதும் இளைஞர் போல் படு சுறுசுறுப்பாகவும் நடிகைகளுடன் ஜாலியாகவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் உங்களைப் பற்றி பேச வரும்போது மட்டும் குறை கூறியும், புத்திமதி சொல்வதுமாக இருந்தாரே, அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?", என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த இளையராஜா, தன் மனக்குமுறலை பகிரங்கமாகக் கொட்டியுள்ளார்.

தனது பதிலில், "மேடையில் என்னைப் பற்றி பாரதிராஜா பேசிய விஷயங்கள் எல்லாமே என்னிடம் தனியாகப் பேசியிருக்க வேண்டியவை.

ஆனால் ஏன் அப்படி பொதுமேடையில் பேசினார் என்றால் தனியாக என்னிடம் பேசும்போது அவருக்கு நான் கொடுக்கும் பதிலில், பேச முடியாவமல் வாயடைத்துப் போவாரே - அதுதான் காரணம்.

கிடைத்தற்கரிய மானிட ஜென்மத்தில் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடைத்தேறுவதை விட்டுவிட்டு தன் புகழைத் தானே பாடுவதிலும், அடுத்தவனை குறை கூறுவதிலுமா இந்த ஜென்மம் கழிய வேண்டும்?

அவருக்கு என் மீதுள்ள குறையெல்லாம் நன் அவரைப் போல இல்லையே என்பதுதான். அதாவது குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ என்னவோ? இல்லை, இப்படி ஏதோ ஒரு விஷயத்தை நான் இழந்து கொண்டிருப்பதாக நினைக்கிறாரோ?

அப்படி நான் மாறுவதென்பது நடக்கிற காரியமா? அவர் நினைக்கிறபடிதான் நான் இருக்க வேண்டுமா? இல்லை என்றால் ஏன் இந்தப் புத்திமதி, என்னை மேடையில் அவமதிப்பது? அவர் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான்.

எப்படியோ இந்த ஜென்மம் வீணாகி விட்டது. கடந்தது கடந்ததுதான். பூங்காற்று திரும்புமா? என்ன இப்படி எழுதிவிட்டேனே என்று உங்களுக்குத் தோன்றலாம்.

அவ்வளவு பெரிய விழாவில் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்று என்னை அவமதித்துப் பேசியது மட்டும் ஏற்புடைய செயல்தானா? அப்படிப் பேசினால் அது இணையதளத்திலும், காணொளிகளிலும் பதிவாக ஆகிவிடும் என்பது பாரதிராஜாவுக்குத் தெரிய வேண்டாமா?," என்று கூறியுள்ளார்.

 

Post a Comment