டெல்லி: விஸ்வரூபம் பட விவகாரத்தைத் தொடர்ந்து சினிமா சட்டத்தை மறுஆய்வு செய்ய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
விஸ்வரூபம் படம் தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதையும் பெரும் பரபரப்பாக்கி விட்டது. இஸ்லாமியர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து இப்படத்திற்கு தமிழக அரசு இரண்டு வார கால தடை விதித்தது.இது பெரும் பிரச்சினையாக மாறி கோர்ட்டுகளையும் சூடாக்கியது.
இறுதியில் கமல்ஹாசன், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் தமிழக அரசு ஆகிய முத்தரப்பினரும் இறங்கி வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் விளைவாக சில காட்சிகளை நீக்க கமல்ஹாசன் ஒத்துக் கொ்ண்டார், இஸ்லாமிய அமைப்புகளும் இதை ஏற்றன, தமிழக அரசும் இதை ஏற்றது. இதையடுத்து படத்துக்கான தடை நீங்கியது. 7ம் தேதி திரைக்கு வருகிறது.
விஸ்வரூபம் படத்திற்குத் தடை விதித்த தமிழக அரசின் செயல் தவறு என்று மத்திய அரசு கூறியது. மேலும் மத்திய தணிக்கை வாரியமும், தான் அளித்த சான்றிதழ் சரியானதே என்றும் விளக்கியது. இருப்பினும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசின் இந்தப் பேச்சு அதன் அறியாமையை வெளிப்படுத்துவதாக சாடியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மத்திய சினிமாட்டோகிராபி சட்டத்தை மறு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதற்காக ஒரு குழுவையும் அது அமைத்துள்ளது. ஒரு நீதிக் கமிஷனாகவே இந்தக் குழுவை அது அமைத்துள்ளது.
இந்த சினிமாட்டோகிராபி சட்டத்தின் படிதான் மத்திய தணிக்கை வாரியம் திரைப்படங்களைப் பார்த்து அனுமதி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெற்ற முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகுல் முன்ட்கல் தலைமையிலான இக்குழுவில் எட்டு பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் பிரபல திரைப்படப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், முன்னாள் நடிகை ஷர்மிளா தாகூர் ஆகியோரும் அடக்கம்.
இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், இந்த சட்டத்தில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்து இந்தக் குழு ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்றார்.
Post a Comment