‘பிரியாணி’ பாதி சமைச்சாச்சு… ஸ்டூடியோ கிரீன் விளக்கம்!

|

Briyani Not Droped Put On Hold

கார்த்தி, ஹன்சிகா நடிப்பில் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் ‘பிரியாணி', ட்ராப் என்று கடந்த இரு தினங்களாக கோடம்பாக்கத்தில் ஒரே பரபரப்பு பேச்சு அடிபட்டு வருகிறது.

வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணியில் கார்த்திக்கு அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார். இவர்களுடன் பிரேம்ஜி அமரன், பவர் ஸ்டார் சீனிவாசன் உட்பட மற்றும் பலர் நடித்து வரும் பிரியாணிக்கு இசை யுவன்ஷங்கர் ராஜா.

வெங்கட் பிரபு கோஷ்டியின் ஒர்க்கிங் ஸ்டைல் பிடிக்காமல் படத்தை நிறுத்தி வைத்திருப்பதாகவும், கார்த்தி ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் நடிக்க கிளம்பிவிட்டார் என்றும் செய்திகள் வெளியானது.

இதுவரைக்கும் 70 நாட்கள் பிரியாணிக்காக கால்ஷீட் கொடுத்திருந்தாராம் கார்த்தி. ஆனால் அதில் 40 நாட்கள் மட்டுமே கார்த்தியை கேமிராவுக்கு முன் நிற்க வைத்தாராம் வெங்கட் பிரபு. ஒரு முன்னணி ஹீரோவை 30 நாட்கள் சும்மா நாற்காலியில் உட்கார வைத்தால் யாருக்குதான் கோபம் வராது என்றும் பேசிக்கொண்டார்கள்.

இதை வைத்துக்கொண்டு, பிரியாணி ட்ராப் என்ற பேச்சு கசண், காது, மூக்கு எல்லாம் வைத்து கலவரமாக்கி விட்டனர். இது குறித்து இப்போது ஸ்டூடியோ க்ரீன், நிறுவனத்தார் வாய் திறந்துள்ளனர். "பிரியாணி படம் ட்ராப் ஆகவில்லை. அந்தப் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 60 சதவீதம் நடைபெற்று முடிந்துள்ளது. மீதியும் சீக்கிரம் முடிந்துவிடும்" என்று கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், இந்தப்படத்தைத் தொடர்ந்து அதே ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தின் படப்பிடிப்பும் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

இந்த படத்திற்காக இயக்குநர் ராஜேஸ், கார்த்தி குரூப் குற்றாலம் கிளம்பியுள்ளனர். இதில் சந்தானம் காஜல் அகர்வால் நடிக்கின்றனர் இதனால் பிரியாணி படத்தின் படப்பிடிப்புக்கு கொஞ்சம் பிரேக் விட்டிருக்கின்றனர். இரண்டுக்கும் ஒரே ஹீரோ, ஒரே நிறுவனம் தயாரிக்கும் படம் என்பதால் இந்த குளறுபடி என்கின்றனர்.

 

Post a Comment