அமைதிப் படை -2 படத்துக்குப் பிறகு முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, இளமை குறும்பு, காமெடி, காதல், சென்டிமென்ட் என ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படத்தை இயக்குகிறார் மணிவண்ணன்.
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் கொடுத்து அசத்தியவர் மணிவண்ணன். கோபுரங்கள் சாய்வதில்லை, இளமைக் காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், 24 மணி நேரம், முதல் வசந்தம், சின்னத் தம்பி பெரிய தம்பி, ஜல்லிக்கட்டு, பாலைவன ரோஜாக்கள், அமைதிப்படை என மணிவண்ணன் இயக்கிய படங்கள் காலப் பதிவுகளாய் நிற்கின்றன. இவை வணிக ரீதியில் வெற்றி பெற்றதோடு, என்றைக்குப் பார்த்தாலும் மனதுக்குப் புத்துணர்வைத் தரத் தவறியதில்லை.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இதுவரை 49 படங்களை இயக்கியுள்ளார் மணிவண்ணன். தமிழின் ஆகச் சிறந்த படங்கள் எனக் கருதப்படும் நிழல்கள், புதிய வார்ப்புகள், கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களுக்கு வசனங்கள் மூலம் சிறப்பு சேர்த்ததவர் மணிவண்ணன்.
2001-ம் ஆண்டு ஆண்டான் அடிமை என்ற படத்தைத் தந்தார். அதன்பிறகு நடிக்கவே நேரம் போதவில்லை அவருக்கு. அவ்வளவு வாய்ப்புகள். ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 40 படங்கள் வரை நடித்தவர் மணிவண்ணன்.
நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாகராஜசோழன் எம்ஏ., எம்எல்ஏ (அமைதிப் படை) என்ற படத்தை இயக்கி வருகிறார். சத்யராஜ், சீமான், ரகுவண்ணன், கோமல் சர்மா, மிருதுளா, வர்ஷா, அன்ஷிபா நடித்துள்ள இப்படம் படப்பிடிப்பு முடிந்து, ரிலீசுக்குத் தயாராகி வருகிறது. இது மணிவண்ணன் திரையுலக வாழ்க்கையில் 50வது படமாகும்.
இந்தப் படத்தின் ரஷ் பார்த்த அத்தனைபேரும் ரசித்துப் பாராட்டி வருகின்றனர். இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற, அதே நேரம் அவசியமான படம் இது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றியை ஈட்டத் தயாராகி வருகிறது நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ.
51வது படம் தாலாட்டு மச்சி தாலாட்டு
அமைதிப்படை 2-க்குப் பிறகு தனது 51வது படத்தை இயக்கத் தயாராகிவிட்டார் மணிவண்ணன். இந்தப் படத்துக்கு தாலாட்டு மச்சி தாலாட்டு என்று தலைப்பிட்டுள்ளார்.
மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் பல புதுமுகங்களை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்துகிறார் மணிவண்ணன்.
மணிவண்ணனுடன் இத்தனை ஆண்டுகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களே இந்தப் படத்திலும் தொடர்கின்றனர்.
படம்குறித்து இயக்குநர் மணிவண்ணன் நம்மிடம் கூறுகையில், "இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம். தலைப்பு ஏன் அப்படி வைத்துள்ளோம் என்பதை படம் பார்க்கும்போது புரிந்து ரசிப்பார்கள்.
நல்ல குடும்பப் பிண்ணனி கொண்ட, பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் ஒரு இளைஞனும் அதே கல்லூரியில் படிக்கும் பெண்ணும் காதலிக்கிறார்கள்.
ஆனால் அந்தக் காதலையும், குடும்பத்தினரின் அன்பையும் அவனுக்கு கிடைக்காமல் போகிறது. காரணம் ஒரு குழந்தை. மற்றவற்றை படத்தில் பாருங்கள். அனைவரும் ரசித்து இந்தப் படத்தைப் பார்க்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது," என்றார்.
Post a Comment