விஸ்வரூபத்துக்கு தியேட்டர் தர விடாமல் தடுத்தது யார்? விசாரணையை ஆரம்பிக்கிறது போட்டி ஆணையம்!

|

Cci Probes Kamal Haasan S Complaint

டெல்லி: விஸ்வரூபம் படத்துக்கு தியேட்டர்கள் தரக்கூடாது என தடுத்தவர்கள் யார் என்ற விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப் போவதாக இந்திய போட்டி ஆணையம் (The Competition Commission of India) அறிவித்துள்ளது.

கமல்ஹாஸன் தனது விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் வெளியாகும் முன்பு டிடிஎச்சில் வெளியிடப் போவதாக அறிவித்தார்.

இதனால் கோபமடைந்த திரையரங்கு உரிமையாளர்கள், அந்தப் படத்தை எந்தத் தியேட்டரிலும் வெளியாக அனுமதிக்க மாட்டோம். அரங்குகள் தரமாட்டோம் என்றனர்.

இது தனது வியாபாரம் செய்யும் உரிமையை தடுக்கும் செயல் என்று கமல்ஹாஸன் புகார் தெரிவித்தார். இந்திய போட்டி ஆணையத்திடம் எழுத்து மூலமாக புகாரும் கொடுத்தார். அத்துடன் திரையரங்க உரிமையாளர் சங்கம் வெளியிட்ட தீர்மான நகலையும் இணைத்திருந்தார். அதில் டிடிஎச் அல்லது வேறு தொழில்நுட்பத்தில் வெளியாகும் எந்தப் படங்களுக்கும் ஒத்துழைப்பில்லை என்று குறிப்பிட்டிருந்தது.

இதுகுறித்து போட்டி ஆணையம் திரையரங்கு உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், திரையரங்க உரிமையாளர் அமைப்பின் தீர்மானம் தொழில் செய்யும் உரிமைக்கு விரோதமானதாக போட்டி ஆணையம் கருதியது.

எனவே இதில் கமல்ஹாஸனின் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதாகக் கருதுவதால், டைரக்டர் ஜெனரல் தலைமையில் விசாரணை நடத்தி 60 நாட்களுக்குள் அறிக்கை தர உத்தரவிடப்பட்டது.

ஆனால் இந்தப் புகாரைக் கொடுத்த சில தினங்களில் திரையரங்க உரிமையாளர்களுடன் சமாதானமாகிவிட்டார் கமல்ஹாஸன். 'நாங்கள் அண்ணன் தம்பிகள், மாமன் மச்சான்கள்... நாங்கள் இப்படித்தான் அடிக்கடி உரிமையாய் சண்டை போட்டுக் கொள்வோம்.. பிறகு கூடிக் கொள்வோம். இது என்னுடைய குடும்பம்,' என்று கூறினார். அவர்களும் 500 ப்ளஸ் அரங்குகளை இந்தப் படத்துக்கு ஒதுக்கிக் கொடுத்தனர்.

ஆனால் அந்த புகாரை மட்டும் கமல் வாபஸ் பெறவில்லை!

இப்போது அந்தப் புகார் மீதான விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடப் போவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Post a Comment