மும்பை: சல்மான் கானின் மென்டல் படஷூட்டிங்கில் பெப்சி அமைப்பின் ஸ்டன்ட் கலைஞர்களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கடந்த 12 நாட்களாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மென்டல் படத்துக்கு ரூ 25 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறியுள்ளார் சல்மானின் தம்பி சோஹைல் கான்.
மென்டல் படத்தில் பெப்சி அமைப்பைச் சேர்ந்த 50 சதவீத ஸ்டன்ட் கலைஞர்களை பயன்படுத்தவில்லை, பாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட குறைவான சம்பளம்தான் வழங்குகிறார்கள் என்று குற்றம்சாட்டி பெப்சி அமைப்பினர் படப்பிடிப்பைப் புறக்கணித்தனர்.
இதையடுத்து இரு பாலிவுட்டும் கோலிவுட்டும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதுபற்றி பெப்சி நிர்வாகிகள் மும்பை சென்று நடத்திய பேச்சுவார்த்தையும் பலனளிக்கவில்லை.
இதுபற்றி மென்டல் தயாரிப்பாளர் சோஹைல் கான் கூறுகையில், "தென்னிந்திய ஸ்டன்ட் மாஸ்டர்தான் இப்படத்துக்கு நியமிக்கப்பட்டார். அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கான்பெடரேஷன் விதிப்படி 70 சதவீதம் ஸ்டன்ட் கலைஞர்களை அந்த அமைப்பிலிருந்து பயன்படுத்த வேண்டும், 30 சதவீதம் பிற கலைஞர்களை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பெப்சியோ தங்கள் அமைப்பிலிருந்து 50 சதவீதம் பேரைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி, ஷூட்டிங்கைப் புறக்கணித்துவிட்டனர். இதுதான் பிரச்சினை...," என்றார்.
அகில இந்திய திரைப்பட சம்மேளன தலைவர் தர்மேஷ் திவாரி கூறுகையில், "மார்ச் 2013 ல் செய்த ஒப்பந்தப் படி நடக்கவில்லை பெப்சி. திரும்ப திரும்ப 50 சதவீத கலைஞர்களை பெப்சியிலிருந்தே எடுக்க வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள்," என்றார்.
இந்த நிலையில் சில தயாரிப்பாளர்கள் தென்னிந்திய ஸ்டன்ட் மாஸ்டர்களை தங்கள் படத்திலிருந்து நீக்கி விட்டு பாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்களை நியமிக்க ஆரம்பித்துள்ளார்களாம்.
Post a Comment