சென்னை: விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை டிடிஎச்சில் வெளியிடப் போவதாக கமல் தரப்பிலிருந்து செய்தி கசிந்துள்ளது. ஆனால் அவரது செய்தித் தொடர்பாளர் இதனை மறுத்துள்ளார்.
கமல் ஹாஸன் தானே எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்து, வெளியிட்ட படம் விஸ்வரூபம். இந்தப் படம் கிளப்பிய சர்ச்சைகள் அனைத்தும் நினைவிருக்கலாம்.
இந்த சர்ச்சைகள் அனைத்துக்கும் முதல் புள்ளியே, கமல் தன் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதாக அறிவித்ததுதான்.
இப்போது ஒரு வழியாக விஸ்வரூபம் முதல் பாகம் 50 நாட்களைத் தாண்டிவிட்டது. இந்த ஓட்டத்துக்கு முக்கிய காரணம், அந்த சர்ச்சைகளும் பரபரப்பும்தான். அடுத்து இப்போது இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கிவிட்டார் கமல்.
முதல் பாகத்தில் அமெரிக்காவைக் காப்பாற்றிய கமல், இந்த இரண்டாம் பாகத்தில் தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுகிறாராம்.
வரும் ஆகஸ்டு 15-ந் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் வி.டி.வி.கணேஷ் தெரிவித்திருந்தார்.
3 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்படுவதாகவும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிடிஎச்
‘விஸ்வரூபம்' இரண்டாம் பாகத்தை டி.டி.எச்.களில் ஒளிபரப்ப கமல் திட்டமிட்டுள்ளாராம். இதற்கான முயற்சிகள் இப்போதே நடப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இது தியேட்டர்களில் வெளியாகும் முன்பா அல்லது வெளியான பின்பா போன்ற விவரங்களை கமல் தரப்பு வெளியிடவில்லை.
மறுப்பு
ஆனால் இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்றும், படம் இன்னும் முடிவடையாத நிலையில் இப்படி செய்திகள் வருவது மற்றவர்களை தவறாக வழிநடத்திவிடும் என்றும் கமலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment