சென்னை: சென்னையில் ஒரு நாள் படத்துக்கு அரசு வரிவிலக்கு கொடுக்கவில்லை என்று வந்தது பொய்யான செய்தி என நடிகர் சரத்குமார் கூறினார்.
ராதிகா தயாரிப்பில், சரத்குமார், சேரன், பிரசன்னா, பிரகாஷ்ராஜ் உள்பட பலரும் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் சென்னையில் ஒருநாள்.
தரமான படம் என பலராலும் பாராட்டப்படும் இந்தப் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்கவில்லை என்றும், காரணம் சன் டிவி நல்லாசியுடன் என்று குறிப்பிட்டு படத்தை விளம்பரப்படுத்தியதுதான் என்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் ஒரு நாள் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள இன்று ராடான் மீடியா அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர் சரத்குமார் உள்ளிட்ட படக் குழுவினர்.
அப்போது, படத்தின் வரிவிலக்கு விவகாரம் குறித்து கேட்டபோது, "இதில் கொஞ்சமும் உண்மையில்லை. இப்படியெல்லாம் கூடவா யோசித்து செய்தி எழுதுவார்கள்...!
இந்தப் படத்துக்கு அரசு வரிவிலக்கு கொடுத்துவிட்டது. என்னிடம் அதற்கான ஆவணங்கள் அனைத்தும் உள்ளன. வதந்திகளை நம்பி இப்படியெல்லாம் எழுதாதீங்க," என்றார்.
இந்தப் படத்தின் கதைக்கு மூல காரணமே, சென்னையில் விபத்தில் இறந்த ஹிதேந்திரன்தான். அவன் பெயரை டைட்டிலில் குறிப்பிட விரும்பினார்களாம் சென்னையில் ஒரு நாள் படக்குழுவினர். ஆனால் ஹிதேந்திரன் குடும்பத்தினர் விரும்பாததால் குறிப்பிடவில்லையாம்.
Post a Comment