சென்னை: படத்தில் கதாநாயகி ஆக்குவதாகக் கூறி ரூ 4 லட்சம் பணத்தைப் பறித்துவிட்டதாக சினிமா இயக்குநர் ஒருவர் மீது புகார் கூறியுள்ளார் டிவி நடிகை விஜயலட்சுமி.
சென்னை ரெட்ஹில்ஸ் பாடியநல்லூரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 28). இவர் நேற்று தனது கணவர் தர்மாவுடன் வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் பேசுகையில், "இலங்கையைச் சேர்ந்த நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டேன். டி.வி. தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. துளசி உள்பட டி.வி. தொடர்களில் நடித்தேன்.
இந்த நிலையில், என்னை சினிமாவில் கதாநாயகி ஆக்குவதாக சொல்லி இயக்குநர் ர் ஒருவர் ஆசை காட்டினார். அவரது ஆசை வார்த்தையில் மயங்கி ரூ.4 லட்சம் பணம் மற்றும் ஏராளமான நகைகளை அவரிடம் கொடுத்தேன்.
ஆனால் அவர் என்னை கதாநாயகி என்று விளம்பர படுத்தியதோடு சரி. ஏமாற்றிவிட்டார். இப்போது அவர் ஒரு பெரிய மோசடி பேர்வழி என்று தெரிய வந்துள்ளது.
வேலை வாங்கி தருவதாக நிறைய பேரிடம் மோசடி செய்துள்ளார். வங்கியில் கடன் வாங்கித் தருவதாகவும், வீட்டுவசதி வாரியத்தில் நிலம் வாங்கித் தருவதாகவும் பல பேரிடம் பணம் சுுட்டி உள்ளார்.
இப்போது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு கொடுத்துள்ளேன். என்னோடு மேலும் இருவரும் புகார் கொடுத்து இருக்கிறார்கள்," என்றார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.அவரது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி மாதவரம் துணை கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார் கமிஷனர்.
Post a Comment