கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இசைஞானி இளையராஜாவும் இயக்குநர் மணிரத்னமும் மீண்டும் சந்தித்தனர். வெகுநேரம் மனம் விட்டுப் பேசினர்.
பிரபல இந்தி இயக்குநர் பால்கிதான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதனால் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளையராஜாவும் மணிரத்னமும் இணைந்த அத்தனை படங்களும் வெற்றிதான். இந்தப் படங்களில் அனைத்துப் பாடல்களும் சிகரம் தொட்டவை.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக, 1991-ம் ஆண்டு வெளியான தளபதிக்குப் பிறகு இருவரும் பிரிந்தனர். அந்த கோபத்தில்தான் ஏ ஆர் ரஹ்மானை அறிமுகப்படுத்தினார் மணிரத்னம்.
கடந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளாக மணிரத்னம் படங்களுக்கு ரஹ்மான்தான் இசை.
ஆனாலும் இன்றுவரை இளையராஜா - மணிரத்னம் கூட்டணியில் படம் வராதா என்ற ஆவல் சினிமா ரசிகர்களுக்கு உள்ளது.
இந்த நிலையில் மணிரத்னம் இயக்கவிருந்த பொன்னியின் செல்வன் படத்துக்கு இளையராஜாவும் ரஹ்மானும் இணைந்து இசையமைக்கப் போவதாகக் கூட செய்தி வெளியானது. ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
பிரபல இந்தி இயக்குநர் பால்கி தற்போது ஒரு புதிய படம் இயக்கி வருகிறார். அந்தப் படத்துக்கு இசை இளையராஜாதான். இதன் பின்னணி இசை சேர்ப்பு சமீபத்தில் மும்பையில் நடந்தது. அப்போது இளையராஜாவுடன் மணிரத்னத்தை சந்திக்க வைக்க முயற்சி மேற்கொண்டார் பால்கி.
மும்பை ஸ்டுடியோ ஒன்றில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இளையராஜாவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார் மணிரத்னம். இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து, அடுத்த படம் குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.
இதன் மூலம் இருவரும் அடுத்த படத்தில் இணையும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Post a Comment