ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டதால், நாங்கள் குடிகாரர்களாகிவிட்டோம், எனவே, அவர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று 2 பட்டதாரிகள் புகார் கொடுத்துள்ளனர்.
ஆந்திர மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், அம்ரு நாயக் என்ற 2 முதுநிலை பட்டதாரிகள் தான் இப்படி ஒரு புகாரை கொடுத்துள்ளனர்.
ரசிகர்கள்:
இருவரும் பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தீவிர ரசிகர்களாம்.
மதுவுக்கு அடிமை...
மகேஷ்பாபு ஒரு மது கம்பெனியின் விளம்பரத்தில் இருப்பதை பார்த்த இவர்களும் அந்த மதுவை குடிக்க ஆரம்பித்தார்களாம். பின்னர் மதுவுக்கு அடிமையாகி விட்டார்களாம்.
தலைவன் வழி...
'நாங்கள் மகேஷ் பாபுவுக்கு ரசிகர்களாக இருந்ததால் குருட்டுத்தனமாக அவரை பின்பற்றி விட்டோம். குடிப்பழக்கத்தால் இப்போது நாங்கள் தினமும் ரூ.1000 மதுவுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அதோடு எங்கள் உடல்நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது' என்று கூறுகிறார்கள் இருவரும்.
இண்டர்வியூக்கும் போகல...
மதுப்பழக்கத்தினால், அவர்களால் வேலைக்கான நேர்முகத் தேர்வில் கூட கலந்து கொள்ள முடியவில்லையாம்.
மனைவி பிரிந்தார்...
குடிப்பழக்கத்தால் நாயக்கின் மனைவியும் பிரிந்து சென்றுவிட்டாராம்.
வேண்டாமே, தவறான வழிகாட்டல்...
பிரபலமாக விளங்குபவர்கள் இதுபோன்ற விளம்பரங்களில் தயவுசெய்து ஈடுபடாதீர்கள் என இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அபாய எச்சரிக்கை இல்லை...
இத்தனைக்கும் அந்த மது விளம்பரத்தில் குடிப்பழக்கத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்ற எச்சரிக்கை வாசகங்களும் இல்லையாம்.
நஷ்ட ஈடு வேண்டும்...
உரிய நஷ்ட ஈடு வழங்குவதுடன், சட்டப்படி நடிகர் மகேஷ் பாபு, அந்த மதுக்கம்பெனி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மது விளம்பர பலகை அகற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டி.ஜி.பி.க்கு உத்தரவு...
ஆணையம் இந்த புகாரை படித்துப் பார்த்துவிட்டு, இதுகுறித்து 3 வாரங்களுக்குள் ஒரு அறிக்கை தாக்கல் செய்யும்படி போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளது.
Post a Comment