மேலும் 3 வழக்குகளில் பவர் ஸ்டார் மீண்டும் கைது: குவியும் புகார்கள்

|

Power Star Srinivasan Arrested 3 More Cases

சென்னை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மேலும் 3 வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பவர் ஸ்டார் சீனிவாசன் ஆந்திர தொழில் அதிபர் ரங்கநாதனுக்கு ரூ.20 கோடி கடன் வாங்கிக் கொடுக்க ரூ.50 லட்சம் கமிஷன் பெற்றார். ஆனால் அவர் கடன் வாங்கிக் கொடுக்கவும் இல்லை, கமிஷன் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து ரங்கநாதன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கடந்த மாதம் 26ம் தேதி பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

பவர் பாபா டிரேடிங் கம்பெனி என்ற நிதி நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் கடன் வாங்கித் தருவதாக உறுதியளித்து ஒரு தொகையை கமிஷனாக பெற்று வந்தார். இந்த நிறுவனம் குறித்து பல்வேறு மாநிலங்களில் விளம்பரமும் செய்துள்ளார். சில ஏஜெண்டுகளை நியமித்து அவர்கள் மூலம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக புகார்கள் வந்தன. பவரிடம் ஏமாந்தவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

பவர் மீது இதுவரை 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சண்டிகரைச் சேர்ந்த ஜெகதீஸ் சிங், கோவாவைச் சேர்ந்த ரதோர் மற்றும் பெசன்ட் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாதன் ஆகியோர் கொடுத்த புகார்களின்பேரில் போலீசார் பவரை மேலும் 3 வழக்குகளில் மீண்டும் கைது செய்துள்ளனர்.

 

Post a Comment