கும்பகோணம்: இயக்குனர் பாலா மீது இந்திய பணத்தை அவமதித்ததாக கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் காவல் நிலையங்களில் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணியினர் புகார் அளித்துள்ளனர்.
கடந்த மாதம் 25ம் தேதி நாம் தமிழர் இயக்கம் சார்பில் இயக்குனர் பாலாவுக்கு கோவையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய பாலா, தான் பட வாய்ப்புக்காக ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களை மேடையில் கூறினார். அப்போது சீமானும், அவரும் ஒரே அறையில் வறுமை நிலையில் தங்கி இருந்ததாகவும், முதல் திரைப்பட பட வாய்ப்பு கிடைத்த போது, தங்களுக்கு பல லட்சம் ரூபாய் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் அந்த பணத்தை தாங்கள் தங்கியிருந்த அறைக்குள் கீழே கொட்டி இருவரும் ஏறி மிதித்து இந்த லட்சுமியைத் தானே நாம் தேடிக் கொண்டு இருந்தோம். நல்லா ஏறி மிதிடா என்று இருவரும் மிதித்தாக அவர் தெரிவித்தார்.
பாலாவுக்கு பணம் தேவைப்படும் போது எனக்கு 20 லட்சுமி அனுப்புடா என்றும், சீமானுக்கு பணம் தேவைப்படும்போது 10 லட்சுமி அனுப்புடா என்றும் பேசிக்கொள்வதாக பாலாவே கூறியதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையல், இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில செயலாளர் குருமூர்த்தி கும்பகோணம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், இந்திய பணத்தையும், இந்து மக்களால் கடவுளாக வணங்கப்படும் லட்சுமியையும் பாலா அவமதித்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதே போன்று திருவிடைமருதூர் காவல் நிலையத்திலும் பாலா மீது இந்து மக்கள் கட்சி சார்பில் மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment