நடிகர் சங்கத்திலிருந்து குமரி முத்து நீக்கம்... விஷாலுக்கு மன்னிப்பு!

|

Actor Kumari Muthu Dismissed From Artist Association

நடிகர் சங்கத்திலிருந்து நகைச்சுவை நடிகர் குமரி முத்து நீக்கப்பட்டார். நடிகர் சங்கத்தை விமர்சித்ததால் நிர்வாகிகளின் கண்டனத்துக்குள்ளான விஷால் மன்னிக்கப்பட்டார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காமெடி நடிகர் குமரி முத்து, நடிகர் சங்கத்தில் மூத்த உறுப்பினராக இருந்தார். நடிகர் சங்க கட்டிடம் வழக்கு தொடர்பாக சங்கத்தின் தலைவர் சரத்குமார் மீதும், பொதுச் செயலாளர் ராதாரவி மீதும் குமரிமுத்து குற்றச்சாட்டுகள் கூறி வந்தார்.

முறைகேடுகள் பற்றி நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளதால் இருவரும் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தி நடிகர் சங்கத்துக்கு கடிதமும் அனுப்பினார்.

ஆனால் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகும் முன்பே தீர்ப்பு வந்து விட்டது என்று எப்படி சொல்லலாம் என விளக்கம் கேட்டு குமரிமுத்துவுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது.

குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை செயற்குழுவில் தாக்கல் செய்யும்படியும் வற்புறுத்தப்பட்டது. ஆனால் செயற்குழு கூட்டத்துக்கு வராமல் குமரிமுத்து அவகாசம் கேட்டார். அவர் கோரியபடி அவகாசமும் அளிக்கப்பட்டது. ஆனாலும் ஆதாரம் அளிக்கவில்லை.

இதையடுத்து நடிகர் சங்க செயற்குழு மீண்டும் இப்பிரச்சினை குறித்து விவாதித்தது. நடிகர் சங்கத்தையும், சங்க நிர்வாகிகளையும் பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி அவமதித்த குமரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வற்புறுத்தினார்கள்.

சங்க நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் மூவரும் நடவடிக்கை வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். ஆனால் செயற்குழு உறுப்பினர்கள் அதனை ஏற்காததால் சங்கத்திலிருந்து குமரி முத்து நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விஸ்வரூபம் பிரச்சினையில் நடிகர் சங்கம் சரியாக செயல்படவில்லை என்று விமர்சித்ததற்காக நடிகர் விஷால் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வந்தனர் செயற்குழு உறுப்பினர்கள். ஆனாலும் இது முதல் முறை என்பதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

Post a Comment