கோல்டன் ஃப்ரைடே ஃபில்ம்ஸ் தயாரிப்பில் ஸ்ரீகாந்த் - சந்தானம் - சுனைனா நடிக்க கணேஷா இயக்கம் புதிய படத்திற்கு 'நம்பியார்' என்று பெயரிட்டுள்ளனர்.
நண்பன், பாகன் என ஸ்ரீகாந்திற்கு மீண்டும் கிடைத்திருக்கும் நல்ல ரூட்டில் அடுத்த படமாக ஷூட்டிங்கில் இருப்பது 'ஓம் சாந்தி ஓம்'. இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கும் வேளையில் அடுத்த படமாக தொடங்க இருக்கிறது நம்பியார். அறிவியல் களம் சார்ந்த முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது நம்பியார். ஸ்ரீகாந்த் இதை தனது கனவுப் படம் என்றே குறிப்பிடுகிறார்.
தலைப்பு மிகப்பெரிய ஜாம்பவானின் பெயராச்சே... பிரச்சனையை உருவாக்கிவிடக்கூடாது என்பதால், நம்பியாரின் மகன் மோகன் நம்பியாரிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள்.
"நீங்கள் தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள் என அனுமதி கொடுத்ததோடு தனது வாழ்த்தையும் ஸ்ரீகாந்துக்கு தெரிவித்துள்ளார் மோகன்.
எங்கள் படக்குழுவோ அவருக்கும் அவர்தம் குடும்பத்துக்கும் உண்மையிலேயே நன்றிக்கடன் பட்டுள்ளது என்கிறார் இயக்குநர் கணேஷா. பிரபல இயக்குனர் ராஜ மௌலியின் கதை இலாகாவில் பணிபுரிந்தவர்தான் இந்த கணேஷா. படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த சயன்ஸ் ஃபிக்ஷன் படம்.
அமரர் எம்ஜிஆர் அவர்களின் மிக ராசியான வில்லன் நம்பியார். முதலில் நம்பியாரை புக் பண்ணிவிட்டீர்களா என்றுதான் கேட்பாராம் மக்கள் திலகம். இந்த படத்தின் கதைக்கும் நம்பியார் என்ற தலைப்புக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கும் என்கிறார் இயக்குநர்.
நம்பியார் படத்துக்கு இன்னொரு பலம் சந்தானம். கதையைக் கேட்ட மாத்திரத்தில் அவ்வளவு பிஸியான நேரத்திலும் அதிகபட்ச தேதிகளை ஒட்டுமொத்தமாக வழங்கியிருக்கிறார். படத்தின் இன்னொரு ஹீரோ சந்தானம் எனலாம்.
சுனைனா ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்தக் கதையை முதலில் விஜய் ஆன்டனியிடம் சொல்லியிருக்கிறார்கள். சொந்தப் படத் தயாரிப்பு, நடிப்பு மற்றும் பெரிய படங்களுக்கு இசை என பிஸியாக இருப்பதாக மறுத்துவிட்டாராம் அவர்.
பின்னர் கதையின் தன்மையைப் புரிந்து கொண்டவர், தானே இசையமைக்கிறேன் என முன்வந்திருக்கிறார். இப்போது கம்போசிங்கில் பிஸியாகியிருக்கிறார். ஜெயப்பிரகாஷ், சுப்பு, ஜான் விஜய், தேவ தர்ஷினி, ஸ்ரீரஞ்சனி முக்கிய நடிகர்களும் படத்தில் உள்ளனர்.
Post a Comment