திருச்சி: திருச்சி மாவட்ட விஜய் தலைமை நற்பணி இயக்கம் சார்பில் 15 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடிகர் விஜய் நடத்தி வைத்தார்.
திருச்சியில், மாவட்ட விஜய் தலைமை நற்பணி இயக்கம் சார்பில் 15 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழாவும், 51 சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழாவும் நேற்று தென்னுனூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு 15 ஜோடிகளுக்கு தனது கையால் திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு ஆசி வழங்கினார். மேலும், அவர்களுக்கு சீர் வரிசையாக பீரோ, மிக்சி, சமையல் பாத்திரங்கள் மற்றும் பாய் உள்ளிட்ட 51 வகையான பொருட்களை வழங்கினார்.
அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் விஜய் அளித்த பதில்,
விரைவில் வெளியாக உள்ள தலைவா படம் அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்.
இந்த பணிக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது எனது மன திருப்திக்காக செய்யும் பணியாகும். மக்களுக்கு தொண்டு செய்வதில் நான் திருப்தி அடைகிறேன். இது போன்ற நிறைவான பணிகளுக்கு ஈடாக எதுவும் இல்லை என்று கருதுகிறேன். இதைத் தவிர வேறு சந்தோஷம் இல்லை.
எனது மகன் சஞ்சய் ஒரு சமயம் நடிகர் ஆக வேண்டும் என்கிறான். இன்னொரு சமயம் கிரிக்கெட் வீரராக போகிறேன் என்கிறான். அவனுடைய எதிர்காலத்தை அவன் தான் நிர்ணயத்துக் கொள்ள வேண்டும். எனது மகள் திவ்யா சிறு குழந்தை என்பதால் அவளது எதிர்காலம் பற்றி பின்பு யோசிக்கலாம் என்றார்.
Post a Comment