விளம்பரத்தை தொடர்ந்து மலையாள படத்தில் இருந்தும் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்

|

திருவனந்தபுரம்: ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சிறை சென்றதால் ஸ்ரீசாந்த்தின் விளம்பர வாய்ப்பைத் தொடர்ந்து சினிமா வாழ்க்கைக்கும் முற்றுப் புள்ளி விழுந்துள்ளது. மலையாள சினிமாவில் ஸ்ரீசாந்த் கவுரவ வேடத்தில் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள கவிஞரும் இசையமைப்பாளருமான கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி இயக்கத்தில் உருவாகும் 'மழவில்லினட்டம் வரே' (வானவில்லின் நுனி வரை) என்ற மலையாள திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.

portion malayalam film acted sreesanth to be removed

பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்தியாவுக்கு வரும்போது அவரது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகிறது. இதை சுற்றித்தான் படத்தின் கதைக் களம் அமைந்துள்ளது. இதில் இந்திய அணியின் வீரர்களில் ஒருவராக கவுரவ வேடத்தில் ஸ்ரீசாந்த் நடித்திருந்தார். சூதாட்ட சர்ச்சையைத் தொடர்ந்து அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஸ்ரீசாந்த் இந்தியாவின் சிறந்த வேகப் பந்து வீச்சாளர். அவர் எனது நல்ல நண்பர்களுள் ஒருவர். எனவே, எனது படத்தில் அவரை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்தேன். தற்போது, வரும் செய்திகளை கருத்தில் கொண்டு அவர் நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம்.

இந்த படத்தில் லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் அப்பாஸ் ஹசன் கதாநாயகனாகவும், அர்ச்சனா கவி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். வரும் செப்டம்பர் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.

கேரள அரசின் லாட்டரி விளம்பரத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஸ்ரீசாந்த் இப்போது சினிமாவில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் சிறை சென்றதோடு சினிமா, விளம்பர வாய்ப்பையும் இழந்து தவிக்கிறார் ஸ்ரீசாந்த்.

 

Post a Comment