சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல்நிலை குறித்து நேற்று மாலை திடீரென மோசமான வதந்திகள் பரவின. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் கவலைக்குள்ளாகினர்.
ஆனால் பின்னர் அது முற்றிலும் வதந்தி என்பது தெரிய வந்தது.
கடந்த மூன்று தினங்களாகவே ரஜினியின் உடல்நிலை குறித்து தவறான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ரஜினி கோச்சடையான் இறுதிக் கட்டப் பணிகளில் மும்முரமாக உள்ளார். சில தினங்களுக்கு முன்புதான் படத்தின் இந்தி பதிப்புக்காக ஒரு பாடல் பாடியிருந்தார். தொடர்ந்து கேன்ஸ் விழாவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தவர், கோச்சடையான் ட்ரைலரை இன்னும் சிறப்பாக தயாரிக்கச் சொல்லிவிட்டு, பயணத்தை ரத்து செய்தார்.
ஆனால் அவர் உடல்நிலை காரணமாகத்தான் பயணம் ரத்து செய்யப்பட்டதாக சிலர் பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்துவிட, அதை மறுத்து தயாரிப்பாளர் முரளி மனோகர் அறிக்கை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இன்று மாலை திடீரென்று மீண்டும் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் ட்விட்டர் வழியாக பரவின. காமெடி நடிகர் விடிவி கணேஷ் அனுப்பியதாக வெளியான ஒரு ட்விட்டை, பேஸ்புக்கில் பலரும் பகிர ஆரம்பித்தனர்.
இதுகுறித்து ரஜினி வீட்டில் விசாரித்த போது, அப்படியா என்று கேட்டவர்கள், ரஜினி சார் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றனர். ஆனாலும் ராகவேந்திரா மண்டபம் அருகே பலரும் திரள ஆரம்பித்தனர்.
நடிகர் விடிவி கணேஷ் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கிலிருந்து இப்படி வதந்தி பரவியிருப்பதாக தெரிந்த பிறகுதான் ரசிகர்கள் அமைதியானார்கள்.
Post a Comment