உலகத் தமிழர்களை உற்சாகமாக வைத்திருப்பதில் எப்போதும் குறை வைத்ததில்லை தமிழ் சினிமாவும் அதை உருவாக்குகிற கலைஞர்களும். அதுவும் காற்றில் மிதந்து இதயத்தில் கலந்த இனிய பாடல்களை தமிழர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிப்போய் லைவ் ஷோ செய்யும் இசைக்கலைஞர்களுக்கு எப்போதும் பேராதரவு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் தென் ஆப்பிரிக்க தமிழர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் லோகு இன்னிசை கீதம் வழங்கப்போகும் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக.
எதிர்வரும் ஜுன் 1 ந் தேதி தென்னாப்பிரிக்காவில் ஐசிசி அரைய் டர்பன் என்ற மாபெரும் அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. சுமார் இருபதாயிரம் தமிழர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் செரண்டிபிட்டி குழுவினர் இதில் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை எய்ட்ஸ் நோயாளிகள், மற்றும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவிருக்கிறார்கள்.
2001 ல் துவங்கப்பட்டு இன்று வரை சுமார் 3000 இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் லோகு இன்னிசை குழுவினர் இந்த நிகழ்ச்சியை லைவ் இன்ஸ்ட்ரூமென்ட் மூலம் நடத்தவிருக்கிறார்கள். இதற்காக சுமார் ஐம்பது இசைக்கலைஞர்கள் சென்னையிலிருந்து கிளம்பியிருக்கிறார்கள்.
பாடகி சின்னக்குயில் சித்ரா, எக்ஸ்யூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி புகழ் சுசித்ரா, பாடகர் மனோ, அடடா மழைடா அடை மழைடா புகழ் ராகுல் உள்ளிட்ட ஏராளமான பாடகர்களும் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார்கள்.
Post a Comment