சென்னை: இளம் படைப்பாளிகள் மதுவுக்கு அடிமையாகக் கூடாது என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
பாண்டிய நாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "சுசீந்திரனின் நான் மகான் அல்ல திரைப்படம் பார்த்து வியந்தேன். அதன்பிறகு அழகர்சாமியின் குதிரை படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தபோது, அதை பார்த்து நான் பிரமித்தேன். ஒரு நட்சத்திர அந்தஸ்துடன் இருக்கும் கலைஞர்களை வைத்து படம் எடுத்து தன்னை நிரூபித்த சுசீந்திரன், அடுத்த படத்தில் புதுமுகங்களை வைத்து படம் எடுத்திருந்தார். அதற்கு ஒரு தனி துணிச்சல் வேண்டும்.
விஷாலின் முதல் படமான செல்லமே படத்திற்கு நான் பாட்டெழுதினேன். டி.இமானின் முதல் படமான தமிழன் திரைப்படத்திற்கும் நான் பாட்டெழுதினேன். இயக்குனர் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் மாதிரி இயக்குனர்களுடன் வேலை செய்திருக்கிறேன். அது எனக்குப் பெருமை.
ஆனால் சுசீந்திரன் போன்ற இன்றைய இளம் இயக்குனர்களுடன் வேலை செய்வது எனக்கு மகிழ்ச்சி. இமான், இசையில் வெற்றியடைந்துவிட்டதாக அனைவரும் பேசினார்கள். இன்று இமானின் பாடல்கள்தான் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கின்றன. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இம்மானின் ‘எளிமையான மெட்டு'. இரண்டாவது நீண்ட நாட்கள் கழித்து இமான் இசையமைக்கும் பாடல்களில்தான் சுத்தமான தமிழ் கேட்கிறது.
நேற்று இரவு சீனு ராமசாமி தொலைபேசியில் அழைத்து 'என்னுடைய கெட்ட பழக்கங்களையெல்லாம் நான் விட்டுட்டேன்' என்றார்.
நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இளைய இயக்குனர்களிடம் அபார திறமையிருக்கிறது. அவர்கள் ஒழுங்காக இருந்தால் அவர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.
சீனு ராமசாமி மதுரையிலிருந்து வந்தவர். நான அவரிடம் 'மது' மதுரையில் மட்டும் இருக்கட்டும் உங்களுக்கு வேண்டாம்,' என்றேன்.. அவர் சரி என்றார். எனக்கு அளவில்லா மகிழ்ச்சி," என்றார்.
Post a Comment