மும்பை: மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகளுக்கு தனது குடும்பத்தினர், நண்பர்கள் பெயரை பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் பரிந்துரை செய்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஆனால் இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் லதா. சமீப காலத்தில் லதா சர்ச்சையில் சிக்குவது இது 2வது முறையாகும்.
சில வாரங்களுக்கு முன்பு புனேவில் நடந்த நிகழ்ச்சியொன்றில், நரேந்திர மோடியை பிரதமர் இருக்கையில் அமர வைத்துப் பார்க்க விரும்புவதாக கூறியிருந்தார் லதா. இது சலசலப்பைக் கிளப்பியது.
இந்த நிலையில் தற்போது இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் லதா. அதாவது பத்ம விருதுகளுக்குத் தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் பெயரை லதா பரிந்துரைத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதை உடனடியாக மறுத்துள்ளார் லதா. இதுகுறித்து அவர் விளக்கம் தருகையில், நான் யாரையும் பரிந்துரைக்கவில்லை. குறிப்பாக எனது குடும்பத்தினர், நண்பர்கள் யாரையும் நானாக பரிந்துரைக்கவில்லை.
சம்பந்தப்பட்ட விருது கமிட்டிதான் விருதுகளுக்குரியவர்களைப் பரிந்துரைத்து தெரிவிக்குமாறு கோரியிருந்தது. அதன்படி சில பெயர்களை நான் தெரிவித்தேன். மற்றபடி நானாக, என் சார்பில் யாரையும் பரிந்துரைக்கவில்லை என்று கூறியுள்ளார் லதா.
Post a Comment