அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.. கமல்ஹாசன்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.. கமல்ஹாசன்

இதுதொடர்பாக அவர் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், 2013ம் ஆண்டின் சிறந்த படமாக தனது விஸ்வரூபம் படத்தை ஏக மனதாக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் வீடியோ செய்தி....

 

கேரளத்தினரும் என்னுடைய இசைப் பள்ளியில் சேரலாம்.. ஏ.ஆர். ரஹ்மான்

கோழிக்கோடு: எனது கே எம் இசைப் பள்ளியில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம் என்று இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள அரசு மகளிர் பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

கேரளத்தினரும் என்னுடைய இசைப் பள்ளியில் சேரலாம்.. ஏ.ஆர். ரஹ்மான்

இசை என்பது உலகளாவிய ஒரு மொழியாகும். எனவே, அதை தழுவிக்கொள்ள ஒவ்வொரு இசைப் பிரியர்களுக்கும் உரிமை உண்டு.

இந்த பள்ளியின் சர்வதேச நிர்வாகிகளிடம் கலந்துபேசி ஆலோசித்து, இங்கு கல்வி பயிலும் மாணவிகள் சென்னையில் உள்ள கே.எம்.இசைப் பள்ளியில் சேர்ந்து இசையினை பயில தேவையான அனைத்தையும் செய்வேன் என்ரார்.

ரஹ்மானின் இசைப் பள்ளியில் பலரும் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிரஞ்சீவி தம்பி பவனின் 3வது திருமணம்: ஆஸ்திரேலிய நடிகையை மணந்தார்

ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் இளைய சகோதரரும், நடிகருமான பவன் கல்யாணின் 3வது திருமணத்தைப் பற்றிய தகவல்கள் தான் தற்போது தெலுக்குப் பட உலகில் ஹாட் மேட்டர்.

பரபரப்புகளுக்குச் சிறிதும் பஞ்சமில்லாதவர் சிரஞ்சீவியின் இளைய சகோதரரான நடிகர் பவன் கல்யாண். அண்ணன் சினிமாவில் மிகவும் கொடி கட்டிப் பறந்த காலத்தில் தான் சண்டைப் பயிற்சியாளராக ஆகப் போவதாகக் கூறி, கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றார். அதனைத் தொடர்ந்து அண்ணனின் கட்டாயத்தில் நடிகரானார்.

சிரஞ்சீவி தம்பி பவனின் 3வது திருமணம்: ஆஸ்திரேலிய நடிகையை மணந்தார்

இந்நிலையில் தற்போது பிரபல நடிகராக உள்ள பவன் கல்யாண், தற்போது மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக வெளியான தகவலால் பெரும் சர்ச்சை உண்டாகியுள்ளது.

அறிமுகம்...

1996-ல் 'அக்கட அம்மாயீ, இக்கட அப்பாயீ' (அங்கே பொண்ணு, இங்கே பையன்) என்ற படத்தின் மூலம் தெலுங்குச் சினிமாவில் அறிமுகமானவர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண்.

சர்ச்சை நாயகன்....

அரங்கேற்றத்தின் போதே, கராத்தே வீரரான பவன், தனது குடும்பத்தினரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சென்னையில் உள்ள ஓர் அரங்கில் தனது கைகளின் மீது ஜீப்பை ஓடவிட்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பவன், தனது அண்ணன் சிரஞ்சீவியின் பேச்சை கேட்காமல் 'தெலுங்கு தேசம்' கட்சியில் சேரப்போவதாக பரபரப்பு செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

காதல் திருமணம்...

1997-ல் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நந்தினியை பவன் கல்யாண் திருமணம் செய்துகொண்டார். அப்போது அந்த கல்யாணம் இரு குடும்பத்தினருக்கும் விருப்பம் இல்லாத காதல் திருமணமாக கூறப்பட்டது.

இரண்டாவது திருமணம்...

அதனைத் தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக நந்தினியுடன் விவாகரத்து பெற்ற பவன், 2009-ல் தன்னுடன் 'பத்ரி', 'ஜானி' போன்ற படங்களில் நடித்த ரேணு தேசாயை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அகிரா நந்தன் என்ற மகனும், ஆத்யா என்ற மகளும் உள்ளனர்.

மூன்றாவது திருமணம்...

பிறகு ரேணு தேசாயுடன் என்ன கருத்து வேறுபாடோ தெரியவில்லை. அவரிடமிருந்தும் விலகினார் பவன். இந்நிலையில், தற்போது அன்னா லெழ்நோவா என்ற ஆஸ்திரேலிய நடிகையை பவன் கல்யாண் மூன்றாவது திருமணம் செய்துகொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பதிவுத் திருமணம்...

ஹைதராபாத், எர்ரகட்டா இணைப் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக பதிவாளர் பாசித் சித்திகீ உறுதிப்படுத்தியுள்ளார்.

சாட்சிக் கையெழுத்து....

கலை இயக்குநர் பி.ஆனந்தம் மற்றும் முகம்மத் அப்துல் ஆரிப், என்.சீனிவாசன் ஆகியோர் இத்திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்திட்டுள்ளதாகவும், பதிவு எண் 50, திருமணம் எண் 43ன் கீழ் இது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அன்னா லெழ்நோவா வெளிநாட்டவர் என்பதால் திருமணச் சட்டம், பிரிவு 13-ன் படி சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தை உள்ளது....

ஆனால், இந்த பதிவுத் திருமணம் நடப்பதற்கு முன்னதாகவே இருவரும் குடும்பம் நடத்தியதாகவும், அதில் குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இதை அவர்கள் பதிவுத் திருமணத்துக்கான வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

குழப்பம்....

இந்நிலையில் யார் இந்த அன்னா லெழ்நோவா என்பதுதான் தெலுங்குப் படவுலகின் மில்லியன் டாலர் கேள்வி. 'தீன்மார்' படத்தில் பவன் கல்யாணுடன் நடித்த டானா மார்க்ஸ் என்ற நடிகைதான் அன்னா லெழ்நோவா என்று ஒருதரப்பினர் கூறிக்கொண்டிருக்க, அந்த நடிகைக்கும், திருமணப் பதிவு பத்திரத்திலுள்ள புகைப்படத்துக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லையே என்று மற்றொரு தரப்பினர் மறுக்கின்றனர்.

தொடரும் மவுனம்...

ஆனால், பவன் கல்யாண் தரப்போ ஆம் என்றும் சொல்லாமல், இல்லையென்றும் மறுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

துபாயில் பிரபு... முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு

துபாய்: துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் நடிகர் பிரபுவுக்கு துபாய் கான்கார்ட் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

டிசம்பர் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு துபாய் கான்கார்ட் ஹோட்டல் அரங்கில் துபாய் முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் தலைமையில் நடிகர் பிரபுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் பிரபுவுக்கும், அவரது துணைவியாருக்கும் துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் நினைவு பரிசினை சங்க தலைவர் மோகன், துணைச் செயலாளர் சிகாமணி ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் பிரபு பேசுகையில் தான் துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாகவும், முத்தமிழ்ச் சங்க வரவேற்ப்பில் கலந்து கொள்வதில் மக்ழ்ச்சியளிப்பதாக நன்றியுடன் தெரிவித்தார்.

துபாயில் பிரபு... முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு

இதற்கு முன் தானும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும் 2012ஆம் வருடம் துபாய் வந்தபோது துபாய் முத்தமிழ்ச் சங்கம் அளித்த வரவேற்பை நினைவு கூர்ந்தார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் ஷா, அணிஸ், சிகாமணி, ஷாஃபி, ராஜன், கணேஷ், அஜய், கணேஷ், ஹிதாயத்துல்லா, பாலா, வேலு, சுரேஷ், ஷாஃபிக், வெங்கட், ராஜா, நடராஜன், பாரதி, நூர்ஜஹான், ஷர்மிளா, வசந்தி மற்றும் திரளானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

 

தமிழ்நாட்டில் எனக்குக் கொஞ்சம் பிரச்சினை இருக்கு, அதான் நடிக்கல!- அஞ்சலி

ஹைதராபாத்: தமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு.. அதான் தமிழில் இப்போதைக்கு நடிக்க முடியாத சூழல் உள்ளது, என்று நடிகை அஞ்சலி கூறினார்.

தமிழில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படம் ஆந்திராவிலும் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

ஹைதராபாதில் நடந்த இதன் வெற்றி விழாவில் பங்கேற்ற அஞ்சலி தமிழ் படங்களில் தான் நடிக்க முடியாத சூழல் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் எனக்குக் கொஞ்சம் பிரச்சினை இருக்கு, அதான் நடிக்கல!- அஞ்சலி

விழாவில் அவர் பேசுகையில், "ஆதலால் காதல் செய்வீர்' படம் தயாரான போது அதில் கதாநாயகியாக நடிக்க என்னைத்தான் அழைத்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எனக்கு சில பிரச்சினைகள் உள்ளன. அது எல்லோருக்கும் தெரியும்.

எனவேதான் தமிழ் படங்களில் நடிக்காமல் உள்ளேன். ‘ஆதலால் காதல் செய்வீர்' படத்திலும் இதனால்தான் நடிக்க முடியவில்லை.

இந்த படம் ஆந்திராவில் ரிலீசாகி பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியை எனக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்," என்றார்.

 

முழுமையான பிரம்மச்சர்யம் உணர்ந்து வாழ்வேன்!- 'மா ஆனந்தமயி' ரஞ்சிதா!

பெங்களூர்: முழுமையான பிரம்மச்சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ்வேன். இனிமேல் எப்போதும் பிடதி ஆசிரமத்திலேயே தங்கி இருப்பேன், என்று மா ஆனந்தமயியாக மாறியுள்ள நடிகை ரஞ்சிதா கூறினார்.

தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரஞ்சிதா. பின்னர் சினிமாவில் இருந்து விலகி நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு நித்யானந்தா சாமியாருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ பட காட்சிகள் சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

முழுமையான பிரம்மச்சர்யம் உணர்ந்து வாழ்வேன்!- 'மா ஆனந்தமயி' ரஞ்சிதா!

இதையடுத்து நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. நித்யானந்தாவின் மடாலயங்கள் தாக்கப்பட்டது. ரஞ்சிதா தலைமறைவானார். நித்யானந்தா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். ரஞ்சிதாவும் தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளிப்பட்டு ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல என்று அறிவித்தார். தன் மீது அவதூறு பரப்பி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் தற்போது சன்னியாசியாகியுள்ளார். நித்யானந்தாவின் 37-வது பிறந்தநாள் விழா பெங்களூர் அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் நடந்தது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் சன்னியாசியாக விரும்புகிறவர்களுக்கு நித்யானந்தா தீட்சை வழங்குவது உண்டு. இந்த பிறந்த நாளிலும் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் தீட்சை பெற்றனர். அதில் ஒருவர் நடிகை ரஞ்சிதா. இதனால் பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஆபாச வீடியோ சர்ச்சைக்கு பின்னரும் நித்யானந்தா ஆசிரமத்திலேயே ரஞ்சிதா தங்கி இருந்தார். ஆன்மீக சுற்றுப் பயணங்கள், தியான கூட்டங்களில், குண்டலினி எழுப்புதல் என அனைத்து நிகழ்வுகளிலும் நித்யானந்தாவுடனே காணப்பட்டார்.

தற்போது சன்னியாசியாகி உள்ளார். பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் குளித்து ருத்ராட்சை மாலைகள், மற்றும் காவி உடை அணிந்து சன்னியாசியாக தீட்சை பெற்றார்.

பின்னர் மேடையில் அவர் பேசும்போது, "உண்மை, அமைதி, அகிம்சை போன்றவற்றை நான் புரிந்து கொண்டேன். இதன் மூலமே சன்னியாசி ஆகி இருக்கிறேன். இனி எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லை.

முழுமையான பிரம்மச்சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ்வேன். இனிமேல் எப்போதும் ஆசிரமத்திலேயே தங்கி இருப்பேன்," என்றார்.

ஏற்கெனவே நடிகை ராகசுதாவும் இதே நித்யானந்தா மூலம் சன்னியாசம் பெற்றது நினைவிருக்கலாம்.

 

பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் ஜெயரம் ரவியின் நிமிர்ந்து நில்!

சென்னை: சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள நிமிர்ந்து நில் படம் பெர்லின் சர்வதேச பட விழாவில் பங்கேற்கிறது.

ஜெயம் படத்தில் தொடங்கி, அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்தவர் ஜெயம் ரவி.

இப்போது நிமிர்ந்து நில், பூலோகம், மற்றும் கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார்.

பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில்!

நிமிர்ந்து நில் படம் விரைவில் வரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படம் பிப்ரவரி 14- ம் தேதி தொடங்கும் பெர்லின் சர்வதேச பட விழாவில் கலந்து கொள்கிறது.

இன்று ஜெயம்ரவி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில், "அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு எனக்கு இனிமையாக அமையப் போகிறது.

"நிமிர்ந்து நில்' என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படம். அந்த படத்தின் தரத்துக்கு ஏற்ப, படத்துக்கு இத்தகைய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்த ஆண்டு மேலும் பல நல்ல சேதிகள் வரும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ஜில்லா டிலே... டென்ஷன் ஏறுது... குழப்பத்தில் தியேட்டர்கள்!

விஜய்யின் ஜில்லா.. வரணும் நல்லா... என்பதுதான் நமது ஆசையும். ஆனால் நடப்பதைப் பார்த்தால் 'தலைவா ரிடர்ன்ஸ்' ஆகிவிடுமோ என்ற கவலை விஜய்யின் ரசிகர்கள் - அவரைக் கிண்டலடிப்போர் என அத்தனைப் பேருக்கும் வந்துவிடும் போலிருக்கிறது!

பின்னே... போட்டியாளரான அஜீத்தின் வீரம் பட ட்ரெயிலர், இசை... அட சென்சார் சான்றிதழ் கூட வெளியாகிவிட.. விஜய்யின் ஜில்லாவுக்கு இன்னும் டீசர் கூட வெளியாகவில்லை.

ஜில்லா டிலே... டென்ஷன் ஏறுது... குழப்பத்தில் தியேட்டர்கள்!

இசை வெளியீடு என ஒப்புக்கு ஒரு நிகழ்ச்சியை நடத்தினாலும், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ ஒருவரின் படத்துக்கு இப்படியா இசை வெளியீட்டு விழா நடத்துவார்கள் என்ற கேள்வி கோடம்பாக்கத்தில்!

கிறிஸ்துமஸ் தினத்தன்று, ஜில்லா பட முன்னோட்டம் வெளியாகும் என விஜய் மற்றும் ஆர்பி சவுத்ரி இருவருமே அறிவித்திருந்தனர்.

ஆனால் அன்றைய தினம் வெளியாகவில்லை. டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் என மீண்டும் அறிவித்திருந்தனர். ஆனால் இன்று வரை அதுகுறித்த உறுதியான தகவல் ஏதுமில்லை.

இப்படித்தான் தலைவா விஷயத்திலும் நடந்தது. அப்படி ஏதும் ஆகிவிடக் கூடாதே என இப்போது ரசிகர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் வேண்டுகிறார்கள் (பின்னே... எத்தனை முறைதான் இந்த செய்தியையே எழுதிக் கொண்டிருப்பது!!).

 

நிச்சயமான ஜோடிகளுக்கு இன்ப அதிர்ச்சி: தந்தி டிவியின் கல்யாணம்

தந்தி டி.வி.யில் "கல்யாணம்" என்ற புத்தம் புதிய கேம் ஷோ விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். திருமணத்திற்கு முன்பாக இருவீட்டாரையும் அழைத்து, ஜாலியான விளையாட்டுகளை அரங்கேற்றுகிறார்கள். இதில் வெற்றி பெறும் குடும்பத்திற்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் காத்திருக்கின்றன.

நிச்சயமான ஜோடிகளுக்கு இன்ப அதிர்ச்சி: தந்தி டிவியின் கல்யாணம்

நிச்சயதார்த்தம் முடிந்து திருமண நாளுக்காக காத்திருக்கும் இளம் ஜோடிகளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் விதமாகவே, இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

திருமணமான தம்பதிகளை அழைத்து விஜய் டிவியில் நடத்தப்படும் நிகழ்ச்சி நம்ம வீட்டுக் கல்யாணம். இது திருமணத்தை மறுபடியும் நினைவூட்டுகின்றனர்.

ஆனால் திருமணத்திற்குப் முன்பாகவே நிச்சயிக்கப்பட்ட புதுமணப்பெண், மணமகனை அழைத்து நடத்தப்படும் கேம்ஷோ இது. மணநாளுக்கு முன்பாகவே இருவருக்குள்ளும் ஒரு புரிதலை ஏற்படுத்தும் இந்த கல்யாணம் நிகழ்ச்சி, தந்தி டி.வி-யில் விரைவில் களைகட்டும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

 

நலமுடன் வீடு திரும்பினார் இளையராஜா!

நலமுடன் வீடு திரும்பினார் இளையராஜா!

சென்னை: இதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பினார் இளையராஜா.

சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் -23) இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை செய்யப்பட்டது. இரண்டு இடங்களில் இருந்த அடைப்புகள் நீக்கப்பட்டன.

இளையராஜாவுக்கு பூரண ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் செவ்வாய்க்கிழமை முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கி இளையராஜா ஓய்வெடுத்தார்.

இந் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் வீடு திரும்பினார்.

மலேசியாவில் இன்று மாலை நடக்கும் கிங் ஆப் கிங்ஸ் என்ற இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதாக இருந்தது. உடல்நிலை காரணமாக அவர் அதில் பங்கேற்கவில்லை. ஆனால் வீடியோ கான்பரென்சிங் முறையில் திரையில் தோன்று ரசிகர்களுடன் பேசுகிறார் ராஜா. சில வாரங்கள் கழித்து நேரில் சென்று மலேசிய மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

 

'ஒய் திஸ் கொலவெறி?'... இது ஜீ தமிழ் கேம் ஷோ

'ஒய் திஸ் கொலவெறி?'... இது ஜீ தமிழ் கேம் ஷோ

சினிமா தலைப்புகளுக்கு பாடல் வரிகளைத் தேடிய காலம் போய் இப்போது டிவி கேம் ஷோக்களுக்கும் சினிமா பாடல்வரிகளை வைக்கின்றனர்.

ஜீ தமிழ் டிவியில் கடந்த சிலவாரங்களாக புதிய கேம் ஷோ ஒன்று தொடங்கியுள்ளது. பெயர் ‘ஒய் திஸ் கொலவெறி?'

3 படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ‘ஒய் திஸ் கொலை வெறி டி' இந்த ஒரு பாடலின் மூலம் பிரபலமான அனிருத் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இசை, வீரம் மற்றும் திறமை இம்மூன்றையும் பங்கேற்பாளர்கள் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துகின்றனர்.

பொதுவாக இசை நிகழ்ச்சிகளில் பாடகர்கள் தமக்கு பிடித்த பாடலை பாடி மகிழ்விப்பர். ஆனால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் பாடலுக்கிடையே தொகுப்பாளர் தரும் சவால்களை மீறி பாடுகின்றனர்.

பிரபல பாடகர்களுடன், சின்னத்திரை நட்சத்திரங்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர். சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 7 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதியநிகழ்ச்சியை வானொலி தொகுப்பாளர் பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.

 

அதிரடி ஆக்ஷன்: அடுத்த விஜயசாந்தியாக மாறும் நயன்தாரா!

நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறார் நடிகை நயன்தாரா. காதல், கவர்ச்சி, அழுத்தமான நடிப்பு என பல பரிமாணங்களைக் காட்டிய அவர், அடுத்து அதிரடி நாயகியாக நடிக்கிறார்.

ஆந்திராவில் அதிரடிப் படங்களில் நடித்துக் கலக்கினார் விஜயசாந்தி. அந்த மாதிரி அடிதடி சண்டைப் படங்களில் நடிக்கும் ஆசை எல்லா நாயகிகளுக்கும் உண்டு.

சினேகா கூட பவானி படத்தில் நடித்து இந்த ஆசையை நிறைவேற்றினார். இது விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தின் ரீமேக் ஆகும்.

அதிரடி ஆக்ஷன்: அடுத்த விஜயசாந்தியாக மாறும் நயன்தாரா!

அனுஷ்கா இரண்டாம் உலகம் படத்தில் வாள் சண்டை போட்டு நடித்தார். ருத்ரமாதேவி சரித்திர படத்திலும் ஆக்ஷன் நடிகையாக வருகிறார். வாள் சண்டை, குதிரையேற்றம் பயிற்சிகள் பெற்று இதில் நடிக்கிறார்.

தற்போது நயன்தாராவும் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் படத்தில் ஆக்ஷன் நாயகியாக அவதாரம் எடுக்கிறார். இந்த படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார்.

இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் ஜெயம்ரவி ஹாக்கி விளையாட்டு வீரராக வருகிறார். நயன்தாரா கராத்தே மாஸ்டராக நடிக்கிறார். இதற்காக நயன்தாரா கராத்தே பயிற்சியெல்லாம் எடுத்துள்ளாராம்.

காதல் காட்சிகளில் ஜெயம் ரவியுடன் புரள்வதோடு, ஆக்ஷன் காட்சிகளில் வில்லன்களைப் புரட்டி எடுக்கிறாராம்.

 

சென்னையில் பெட்னாவின் '2013 தமிழிசை விழா', 'மாவீரன் தீரன் சின்னமலை' நாட்டிய நாடகம்!

சென்னையில் பெட்னாவின் '2013 தமிழிசை விழா', 'மாவீரன் தீரன் சின்னமலை' நாட்டிய நாடகம்!

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இயங்கும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான ‘வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை", தமிழகத்தில் இயங்கும் ‘இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை"யுடன் இணைந்து முதன்முறையாக தமிழிசை மற்றும் நாட்டிய நாடகம் நடத்துகிறது.

‘2013 தமிழிசை விழா" என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னையில் வருகிற ஞாயிற்றுக் கிழமை, டிசம்பர் 29ம் தேதி மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 நடக்கிறது.

சென்னை தி நகரில் உள்ள பசும்பொன் தேவர் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த ‘2013 தமிழிசை விழா'வில், மாலை 4:00 மணி முதல் 6:00 மணிவரை பாடகி சுசித்ரா பாலசுப்ரமனியம் புறநானூற்றுப் பாடல்களையும், பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி தமிழிசைப் பாடல்களையும் பாட இருக்கிறார்கள்.

அதன்பிறகு, மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை சிறப்பு விருந்தினர்கள் பேசுகிறார்கள்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையைச் சேர்ந்த முனைவர் சுந்தர வடிவேல் வரவேற்புரை நிகழ்த்த, மதுரை மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மருத்துவர் என்.சேதுராமன் அவர்கள் தலைமையேற்க இருக்கிறார்கள்.

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கேபிகே செல்வராஜ் முன்னிலை வகிக்கிறார்கள். ஜெம் தொழிற் குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் ஆர் வீரமணி, வேலூர் விஐடி பல்கலைக்கழகதின் நிறுவனர் கல்வியாளர் ஜி விஸ்வநாதன், கோ-ஆப்டெக்ஸ் மேலான் இயக்குநர் சகாயம் ஐஏஎஸ், மற்றும் விஜிபி தொழில் குழுமத்தின் தலைவர் விஜி சந்தோசம் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

பிறகு, தமிழிசை விழாவின் முக்கிய நிகழ்வாக 'நடராஜ் நாட்டிய வித்யாலயா' வழங்கும் ‘மாவீரன் தீரன் சின்னமை நாட்டிய நாடகம்' அரங்கேற இருகிறது.

இந்த நாட்டியத்துக்கு குரு: நாகை. என்.பாலகுமார், பாடல்கள்: கவிமுகில் கோபாலகிருஷ்ணன்.

நிறைவில், இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த 'இன்னிசை ஏந்தல்' திருபுவனம் ஆத்மநாதன் நன்றி கூறுகிறார். ‘வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை'யைச் சேர்ந்த கொழந்தவேல் இராமசாமி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

தமிழிசை விழாவைக் கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவில் நடத்திவரும் ‘வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை", முதன்முதலாக அமெரிக்காவிற்கு வெளியே தாய்த் தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது குறிப்பிடத்தக்கது. இதே போன்று தமிழர்கள் வாழ்கின்ற உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் நடத்த பேரவை விருப்பம் கொண்டுள்ளது.

 

ஒரு குரூப்பாத்தேன் கதை கேக்குறாய்ங்களாமே விஜய் சேதுபதிக்கு!

விஜய் சேதுபதிதான் கடந்த இரு ஆண்டுகளாக கோடம்பாக்கத்தின் நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார்.

இந்த இரு ஆண்டுகளிலும் தொடர்ந்து 5 வெற்றிப் படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி மட்டும்தான்.

இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதுதான் ஒரு ஹீரோவுக்கு பெரிய சவால்.

ஒரு குரூப்பாத்தேன் கதை கேக்குறாய்ங்களாமே விஜய் சேதுபதிக்கு!

அந்த சவாலை இதுவரை தனியாகச் சமாளித்து வந்த விஜய் சேதுபதி, இப்போது ஒரு புதிய செட்டப்பை உருவாக்கியிருக்கிறாராம்.

இதுவரை படங்களுக்கு தான் மட்டும் நகதை கேட்டு, தேர்வு செய்து நடித்து வந்தவர், இனி கதை கேட்பதற்கென்றே ஐந்து பேர் கொண்ட குழுவை உருவாக்கியிருக்கிறாராம்.

இந்த ஐந்து பேருடன் சேர்ந்து கதை கேட்கும் விஜய் சேதுபதி, கதை சொன்னவர் போன பிறகு, தன் குழுவினர் கருத்தையெல்லாம் கேட்ட பிறகே கால்ஷீட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.

விஜய் சேதுபதி நடிப்பில் 'பண்ணையாரும் பத்மினியும்', 'ரம்மி' இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது.

'சங்குதேவன்' 'வன்மம்', சீனுராமசாமியின் 'இடம் பொருள் ஏவல்', எஸ்.பி.ஜனநாதன் இயக்கும், புறம்போக்கு" போன்ற படங்களில் ஏற்கெனவே நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

2015-க்குப் பிறகு தான் நடிக்கப் போகும் படங்களுக்கு கதை கேட்கத்தான் இந்த புதிய 'நிபுணர் குழு'வை நியமித்திருக்கிறார்!!

 

கேவி ஆனந்த் படத்தில் நடிக்கிறாராமே அஜீத்..!

சினிமா செய்தி என்ற பெயரில் நம்பகத்தன்மை, உறுதிப்படுத்துதல் என எந்த வரையறையும் இல்லாமல், செவி வழிச் செய்திகள்தான் இப்போது மீடியாவை ஆக்கிரமித்து வருகின்றன.

அப்படி வெளியாகியுள்ள ஒரு செய்தி இது.

'கேவி ஆனந்த் படத்தில் அஜீத் நடிக்கிறார்'.

கேவி ஆனந்த் படத்தில் நடிக்கிறாராமே அஜீத்..!

இது சாத்தியம்தானா? இப்போதைய நிலையில் நிச்சயம் வாய்ப்பில்லை (அஜீத் திடீரென மனசு மாறினால் தவிர!).

வீரம் பட ரிலீசுக்குப் பிறகு, இரண்டு மாத விடுமுறை முடிந்து, அஜீத் கையிலெடுக்கும் படம் கவுதம் மேனனுடையதுதான். அந்தப் படம் முடிய எத்தனை மாதங்களாகும் என தெரியாது. ஒரு ஆண்டு கூட ஆகலாம். ஆனால் படத்தின் வசனப் பகுதி காட்சிகள் முடிந்ததுமே, வெங்கட் பிரபு படத்துக்குப் போய்விடுவதாகத்தான் ஒப்பந்தம்.

வெங்கட் பிரபு படம் 2015-ல்தான் முடியும். அதன் பிறகே அவர் வேறு படங்களில் நடிக்க முடியும் என்பதே நிலைமை.

இதற்கிடையில் கேவி ஆனந்தை சமீபத்தில் சந்தித்துள்ளார் விஜய். இந்த சந்திப்புக்கு புதுப்பட டிஸ்கஷன் தவிர வேறு காரணம் எதுவும் இருவருக்கும் இல்லை. விஜய்யை இயக்குவதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார் கேவி ஆனந்தும்.

எனவே அஜீத் - கேவி ஆனந்த் காம்பினேஷனுக்கு வாய்ப்பு குறைவு என்பதே உண்மை என்கிறார்கள்.

 

பெங்களூர் திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்கள் புறக்கணிப்பு: சர்ச்சையில் கமல்

பெங்களூர்: ஒரு தமிழ் திரைப்படத்தைக் கூட திரையிடத் தேர்ந்தெடுக்காமல் புறக்கணித்த பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவை கமல்ஹாசன் தொடங்கி வைக்கலாமா என்ற கேள்வி தமிழ்த் திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளது.

கர்நாடக அரசின் செய்தித்துறை, கர்நாடக சலனசித்ரா அகாடமி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.

பெங்களூர் திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்கள் புறக்கணிப்பு: சர்ச்சையில் கமல்

இந்த நிகழ்ச்சியில் நடிகரும் கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ், நடிகர் சுதீப், நடிகையும் எம்.பி.யுமான ரம்யா, ராதிகா பண்டிட் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஈரானிய திரைப்பட இயக்குநர் பௌரான் டேரக்ஷன்டே, ஜெர்மன் திரைப்பட இயக்குநர் ஹெயின்ஸ் ஜார்ஜ் பெட்வீடஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். விழாவின் முதல் நாளில் குர்தீஷ் இயக்குநர் கர்ஷன் கடர் இயக்கிய 'பெகாஸ்' திரைப்படம் திரையிடப்பட்டது.

சமீப காலமாக இந்திய அளவில் பெரிதாக கவனத்தை ஈர்த்துவரும் தமிழ் திரைப்படம் ஒன்று கூட இவ்விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இதுகுறித்து பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவின் ஏற்பாட்டாளர்களிடம் கேட்டபோது, "கர்நாடகாவை சேர்ந்த 12 பேர் கொண்ட குழு தேர்வு செய்த திரைப்படங்களையே திரையிடுகிறோம்'' என்றனர்.

இதனிடையே தமிழ் திரைப்படங்களை புறக்கணித்த பெங்களூர் திரைப்படவிழாவை கமல்ஹாசன் தொடங்கி வைக்கலாமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

சினிமாவிற்கு மொழி இல்லை; மதமில்லை; ஜாதியில்லை எனக் கூறிவரும் வேளையில், பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது தமிழ்த் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக இவ்விழாவிற்கு வந்துள்ள தமிழக திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

காயத்ரியுடன் மூன்றாவது முறை ஜோடி சேரும் விஜய் சேதுபதி!

நடிகை காயத்ரியுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து, புதிய கிசுகிசுகளுக்கு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறார் முன்னணி ஹீரோ விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி இப்போது மெல்லிசை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் ரஞ்சித் இயக்குகிறார். கடந்த டிசம்பர் 17ம் தேதி இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. படத்தில் மொத்தம் இரண்டு நாயகிகள். அதில் ஒருவர் காயத்ரி.

இவர், ஏற்கெனவே நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், அடுத்து வரவிருக்கும் ரம்மி ஆகிய படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

காயத்ரியுடன் மூன்றாவது முறை ஜோடி சேரும் விஜய் சேதுபதி!

தற்போது மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி-காயத்ரி மெல்லிசை படத்தில் இணைகிறார்கள். ‘பீட்சா' படத்தைப் போன்றே 'மெல்லிசை' படமும் ஒரு திரில்லர் படமாக உருவாகி வருகிறது.

இதுகுறித்து விஜய் சேதுபதியிடம் கேட்டபோது, "உண்மைதான். காயத்ரி இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் நான் தொடர்ந்து நடிக்க தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. திறமையான நடிகை என இயக்குநர்கள் நம்பி ஒப்பந்தம் செய்கிறார்கள்," என்றார்.

 

என்றென்றும் புன்னகை- விமர்சனம்

Rating:
3.5/5
எஸ் ஷங்கர்

நடிப்பு: ஜீவா, த்ரிஷா, சந்தானம், வினய், நாசர், ஆன்ட்ரியா

ஒளிப்பதிவு: ஆர் மதி

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

தயாரிப்பு: தமிழ்க்குமரன்

வெளியீடு: ரெட் ஜெயன்ட்

இயக்கம்: அகமது


நட்பு மற்றும் உறவுகளின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள ஈகோ எத்தனை பெரிய தடையாக உள்ளது என்பதை ரொம்ப வண்ணமயமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் என்றென்றும் புன்னகையில்.

என்றென்றும் புன்னகை- விமர்சனம்

நாசர் மகன் ஜீவா சின்ன வயசாக இருக்கும்போதே, அவர் அம்மா வேறொருவருடன் ஓடிப் போகிறார். இதை தந்தை சொல்லக் கேட்டு பெண்கள் மீதே வெறுப்பு கொள்கிறார் ஜீவா. வேறு பெண்ணை இரண்டாவதாக நாசர் மணந்து கொள்ள, தந்தை மீதும் மகா வெறுப்பு. அந்த வெறுப்புக்கு பயந்து மனைவியை பிரிந்து மகனே உலகம் என நாசர் வாழ்ந்தாலும், அவருடன் பேச மறுக்கிறார் ஜீவா. பள்ளியில் நண்பர்களாக அறிமுகமாகும் சந்தானம் மற்றும் வினய்தான் ஜீவாவின் உலகம். மூவரும் திருமணமே செய்து கொள்ளாமல் 'மொட்டப் பசங்களாகவே' இருப்போம் என சத்தியம் செய்து கொண்டு, கூடிக் குடித்து மகிழ்கிறார்கள்.

அப்போதுதான் த்ரிஷா வருகிறார் அவர்கள் வாழ்க்கையில். செய்த சத்தியத்தை மீறி சந்தானமும் வினய்யும் வீட்டில் பார்க்கும் பெண்களை திருமணம் செய்து கொள்ள, ஜீவா நண்பர்களை வெறுத்து தனி மரமாகிறார்.

இவர் வாழ்க்கையில் காதலும், நட்பும் எப்போது எப்படி நுழைகிறது, தந்தை மீதான வெறுப்பு எப்படி மறைகிறது என்பது க்ளைமாக்ஸ்.

அதிரடித் திருப்பங்கள், ஆக்ஷன் காட்சிகள், கொப்பளிக்கும் ரத்தக் குழம்புகள் என எதுவும் இல்லாத படம் இது.

என்றென்றும் புன்னகை- விமர்சனம்

ஆனால் காட்சிகளின் அழகும், வண்ணமும் - அவற்றின் செயற்கைத் தன்மையை மீறி - ரசிக்க வைக்கின்றன. தாங்க்ஸ் டு ஒளிப்பதிவாளர் ஆர் மதி மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்!

இந்த இருவரும் இல்லாவிட்டால், நிச்சயம் இந்தப் படம் தேறியிருக்காது. மதி படம் பிடித்திருப்பது நம்ம சென்னையைத்தானா என்ற சந்தேகம், நிகழ்வுகள் சுவிட்சர்லாந்துக்கு மாறும் வரையிலும் தொடர்கின்றன. எப்போதும் மழையில் குளித்து வந்த மாதிரியே தெரிகிறது சென்னை. அதேபோல சுவிட்சர்லாந்து காட்சிகளில், நிஜமாகவே பனிக்குளிரை அனுபவிக்கிறது மனசு.

படம் நெடுக ஒரு அழகிய நாயகியைப் போல நம்மை தொட்டும், இறுகத் தழுவியும் இனிமைப்படுத்துகிறது ஹாரிஸ் ஜெயராஜ் இசையும் பாடல்களும். காட்சிகளின் நேர்த்தியைப் பார்த்ததும் ஹாரிஸின் கற்பனை துள்ளிக் குதித்திருப்பதை உணர முடிகிறது.

என்றென்றும் புன்னகை- விமர்சனம்

படத்தில் ஜீவா, சந்தானம், வினய், த்ரிஷா, ஆன்ட்ரியா, நாசர் என ஆறு பேருக்குமே கிட்டத்தட்ட சம வாய்ப்புகள்தான். அத்தனை பேரும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். அநாவசிய நட்பு அல்லது காதல் தத்துவங்கள் எதுவும் இல்லாதது பெரிய ஆறுதல்.

ஜீவா பெண்கள் மீது வெறுப்பைக் கக்கும் போதெல்லாம், எதுக்கு இவ்ளோ டென்ஷனாகிறார் என பார்வையாளர்களே கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் அதற்கான காரணம் தெரிய வரும்போது, கன்வின்ஸ் ஆக வைத்திருப்பது இயக்குநரின் சாமர்த்திய திரைக்கதை.

ஏக சர்ச்சைகளில் சிக்கியிருந்த சந்தானத்துக்கு இது மறுபிறவி எனலாம். படத்தில் எங்குமே ஆயாசம் தெரியாமல் இருக்க முக்கிய காரணம் சந்தானம்தான். அந்த சர்ச்சைக்குரிய அஞ்சு பத்து வசனக் காட்சியை அழகாக மாற்றியிருக்கிறார். வெல்டன்.

வினய் ஒரு நடிகர் மாதிரி இல்லாமல், அந்தக் கதைக்கான ஒரு பாத்திரமாகவே மாறியிருக்கிறார். இதற்கு முன் வந்த படங்களில் இருந்ததைவிட இயல்பான நடிப்பு.

என்றென்றும் புன்னகை- விமர்சனம்

த்ரிஷா பிரமிக்க வைக்கிறார். இத்தனை ஆண்டுகள் ஒரு நடிகை தன் அழகைப் பாதுகாப்பது பெரும் சவால்தான். அதில் நூறு சதவீதம் ஜெயித்திருக்கிறார். மிகவும் ரசித்து நடித்திருக்கிறார். குறிப்பாக அந்த சுவிட்சர்லாந்து காட்சியில், பனியில் மிதந்து வரும் தேவதை போல அத்தனை அழகு.

ஜீவா - த்ரிஷா காட்சிகளில் அபார ரசாயன மாற்றம் (அதாங்க கெமிஸ்ட்ரி!)

இத்தனை சிறப்புகள் இருந்தாலும் படத்தில் எதற்காக தடுக்கினால் ஒரு சரக்குப் பார்ட்டி அல்லது குடி காட்சி? அதிலும் ஒருபடி மேலே போய், டாஸ்மாக் பாருக்குப் பதில், வீட்டுக்குள்ளேயே, தந்தை முன்னிலையில் அல்லது அவருடன் சேர்ந்தே சரக்கடிப்பது சகஜமான சமாச்சரம் என காட்டியிருக்கிறார் இயக்குநர்.

இனி 'மது நாட்டுக்கு, வீட்டுக்கு நல்லது... அனைவரும் சேர்ந்து சரக்கடிப்போம்' என முன்குறிப்பு போட்டே படத்தைத் தொடங்குவார்கள் போலிருக்கிறது.

என்றென்றும் புன்னகை- விமர்சனம்

படம் முழுக்க நண்பர்கள் மூவரும் சேர்ந்தால் ஒன்று சரக்கடிக்கிறார்கள்... அல்லது கழிவறையில் கதையளந்து கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல அந்த க்ளைமாக்ஸ் காட்சியில், ஜீவா த்ரிஷாவிடம் பேசும்போதி ஒரு இயல்புத்தன்மையோ, உணர்ச்சியோ.. தன் கைவிட்டுப் போகவிருந்த அரிய உறவு கிடைத்ததே என்ற குறைந்தபட்ச மகிழ்ச்சி கூட இல்லாமல், ஏதோ சடங்குக்குப் பேசுகிறார். படத்தின் முக்கிய காட்சியை இப்படி ஏனோ தானோ என்றா எடுப்பார்கள்.

கடற்கரையில் வைத்து ஜீவாவை த்ரிஷா கேட்கும் அத்தனை கேள்விகளும் சரியானவை. ஒரு பெண்ணின் நியாயமான உணர்வும்கூட. ஆனால் அதை மதிக்கும்படியான, தன்னைப் போன்ற சக மனுஷியான அவளை சமாதானப்படுத்தும்படியான எந்த பதிலையும் ஜீவா சொல்லவே இல்லை. மாறாக ஐ லவ் யூ என்கிறார். ஐ லவ் யூ என்று சொல்லிவிட்டால், பெண் எல்லாவற்றையும் துடைத்துப்போட்டுவிடுவாள் என்று அர்த்தமா?

என்றென்றும் புன்னகை- விமர்சனம்

ஆனால் படத்தை ரசிக்க இவை எதுவுமே தடையாக இல்லை என்பது பார்வையாளர்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. வயது வித்தியாசம் பார்க்காமல், அதுவும் அப்பாவுடன் குடிக்கிற காட்சிகளை கைத்தட்டி ரசிக்கும்போது, நாம் என்ன சொல்லி என்ன பயன்?

இந்த வார இறுதியை என்றென்றும் புன்னகையுடன் கொண்டாடலாம்!

 

நடிகர் திலீப் வீடு- அலுவலகங்களில் வணிகவரி அதிகாரிகள் ரெய்டு- ரொக்கம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!

நடிகர் திலீப் வீடு- அலுவலகங்களில் வணிகவரி அதிகாரிகள் ரெய்டு- ரொக்கம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!

கொச்சி: பிரபல மலையாள நடிகர் திலீப்பின் கொச்சி வீடு மற்ரும் அலுவலகங்களில் வணிக வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது திலீப் வீட்டில் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் திலீப்.

நிதி நிறுவனம்

திலீப்பின் சகோதரர் அனூர் கொச்சியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மீது தொடர் புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து நேற்று இந்த நிதி நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திலீப் வீட்டில்

அடுத்து கொச்சியில் உள்ள திலீப்பின் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று வணிகவரி மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

சோதனை நடந்து கொண்டிருந்த போதே திலீப்பை உடனடியாக வணிகவரித் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அதிகாரிகள் கூறினர். அதற்கு திலீப் தனக்கு சில வேலைகள் இருப்பதால் விசாரணைக்கு வர முடியாது என்றும், தனக்கு அவகாசம் தர வேண்டும் என்றும் கேட்டார். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர்.

விசாரணை

இதையடுத்து திலீப் உடனடியாக வணிகவரித்துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பல மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 10 மணிக்குத் தான் விசாரணை முடிந்து அவர் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது கூடியிருந்த செய்தியாளர்கள் முன்பு திலீப் பேசுகையில், "எனது வீட்டில் இருந்து ஏராளமான ரொக்கப் பணம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது.

வெறும் 350 டாலர்கள்தான்

சாலக்குடியில் நான் கட்டி வரும் தியேட்டர் செலவுக்கு வங்கியில் இருந்து பணம் எடுத்து வைத்திருந்தேன். அதைத் தான் அதிகாரிகள் எடுத்தனர். அவர்களுக்கு உரிய விளக்கம் கொடுத்துள்ளேன். எனது மைத்துனர் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார். அவர் கொடுத்த 350 அமெரிக்க டாலர்களைத்தான் அதிகாரிகள் எடுத்தனர். இதுதொடர்பாகவும் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளேன்.

நான் கடந்த 18 ஆண்டுகளாக சினிமா உலகில் இருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போலத்தான். நான் எதையும் மறைத்தது கிடையாது," என்றார்.

 

நண்பர்கள், ரசிகர்களிடம் பேசாதே - ஸ்ருதிக்கு அம்மா சரிகா கட்டுப்பாடு

சர்வ சுதந்திரமாக சுற்றித் திரிந்த ஸ்ருதி ஹாஸனுக்கு சில அன்புக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறாராம் அம்மா ஸ்ருதிஹாஸன்.

காரணம், சமீபத்தில் அவர் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல் முயற்சி.

இனி இதுபோன்ற தாக்குதல்கள் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெரிந்த திரைத்துறை நண்பர்கள், ரசிகர்களுடன்கூட போனிலோ நேரிலோ பேசத் தடை விதித்துள்ளாராம் சரிகா.

நண்பர்கள், ரசிகர்களிடம் பேசாதே - ஸ்ருதிக்கு அம்மா சரிகா கட்டுப்பாடு

எதுவாக இருந்தாலும் ஸ்ருதியை அவரது மேனேஜர் மூலம் மட்டுமே அணுக வேண்டும் என்பது சரிகாவின் கண்டிப்பான புதிய உத்தரவு.

அதேபோல, இனி தனியாக வசிப்பதும் ஆபத்து என்பதால், சகல பாதுகாப்புடன்கூடிய புதிய வீட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளாராம் சரிகா.

பாந்த்ரா வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்கு குடிபோக தயாராகிறார். தன் மகள் விஷயத்தில் முன்னாள் மனைவியின் கட்டுப்பாடுகளை அமைதியாக அனுமதித்துவிட்டாராம் கமல்.

 

குணமடைந்தார் இளையராஜா- இன்று அல்லது நாளை வீடு திரும்புகிறார்!

குணமடைந்தார் இளையராஜா- இன்று அல்லது நாளை வீடு திரும்புகிறார்!

இசையானி இளையராஜா இன்று அல்லது நாளை மருத்துவமனையில் இருந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 23ம் தேதி இசைஞானி இளையராஜா நெஞ்சுவலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய இதயத் துடிப்பை கண்காணித்த மருத்துவர்கள் இளையராஜாவுக்கு லேசான மாராடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து அவருக்கு "ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துவந்த இளையராஜா நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இளையராஜா இப்போது தன் அறைக்குள்ளேயே நடமாட ஆரம்பித்துள்ளார்.

தற்பொழுது பூரண குணமாகியுள்ளதால் இன்றோ அல்லது நாளை காலையோ டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ஆக்ஷன் ஹீரோவாக மாறிய சிவகார்த்திகேயன்!

இதுவரை ஜாலி, கேலி, ஆட்டம், பாட்டு என தோன்றி வந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார், மான் கராத்தே படம் மூலம்.

இந்த ஆண்டு அதிக வெற்றிப் படங்கள் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் நல்ல வசூல் கிடைத்தது.

ஆக்ஷன் ஹீரோவாக மாறிய சிவகார்த்திகேயன்!

குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ரூ 25 கோடிக்கு மேல் குவித்து பெரும் லாபத்தை அள்ளிக் கொடுத்தது.

இதன் மூலம் பாக்ஸ் ஆபீஸில் முன்வரிசை நாயகர்களில் இடம் பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்போது அவர் நடித்து வெளிவரவிருக்கும் படம் மான் கராத்தே. இதில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஹன்சிகா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். சந்தர்ப்ப சூழல் அவரை எப்படி தாதாவாக மாற்றுகிறது என்பதுதான் கதை.

இந்தப் படம் ரூ 20 கோடிக்கு விற்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் புதிய படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறாராம் சிவகார்த்தி.

 

தலையிலேயே ‘குட்டி’ மகனுக்கு நடிப்பு சொல்லித் தரும் தலைவர் அப்பா

சென்னை: பலத்த ஆரவாரத்துடன் மகனை திரை உலகிற்கு அறிமுகப் படுத்தும் விழா நடத்திய தலைவர் அப்பா, தற்போது படு அப்செட்டில் இருக்கிறாராம். காரணம் மகனுக்கு ‘சார் போஸ்ட்' சொல்லக் கூட கஷ்டமாக உள்ளது தானாம்.

இதனை வெளியில் சொன்னால் மகனின் எதிர்காலம் பாதிக்கும் என கருதும் அப்பா நடிகர், பெரிய கதாநாயகி தேடிக் கொண்டிருக்கிறோம் என வெளியே பில்டப் கொடுத்து விட்டு, உள்ளே மகனுக்கு நடிப்புப் பயிற்சிப் பட்டறை நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

அதேபோல், மகனின் அறிமுக விழாவிற்கு வந்திருந்த தம்பி நடிகரை நழுவ விடாமல் அருகில் அமர்த்திக் கொண்டாராம் தலைவர். வீண் அரசியல் சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பாத தம்பி, விழாவில் இருந்து எப்படி நழுவுவது என்பதிலேயே குறியாக இருந்தாராம்.

 

நட்சத்திர கிரிக்கெட் துணைத் தூதராக சஞ்சிதா ஷெட்டி!

சென்னை: நட்சத்திரக் கிரிக்கெட்டின் சென்னை அணிக்கு துணைத் தூதராக சஞ்சிதா ஷெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

சி.சி.எல்.எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இந்தப் போட்டியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். விரைவில் 4வது ஆண்டு சி.சி.எல்.போட்டிகள் நடக்கவிருக்கிறது.

நட்சத்திர கிரிக்கெட் துணைத் தூதராக சஞ்சிதா ஷெட்டி!

சென்னை, புனே, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இப்போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

ஏற்கெனவே சென்னை அணிக்கு நடிகை த்ரிஷா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது நடிகை சஞ்சிதா ஷெட்டியும், சென்னை அணியின் துணை விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொள்ளைக்காரன், சூது கவ்வும், த வில்லா போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜில்லாவில் டாப் மோகன் லால்தான்... மகிழ்ச்சியுடன் விட்டுக் கொடுத்த விஜய்!

ஜில்லா படத்தின் டைட்டில் மற்றும் சம்பளம் போன்றவற்றில் முதலிடம் மோகன் லாலுக்கு தருமாறு கேட்டுக்கொண்டாராம் நடிகர் விஜய்.

ஜில்லாவில் முதல் முறையாக மோகன் லாலும் விஜய்யும் நடித்துள்ளனர்.

மோகன்லால் சீனியர். மலையாளத்தில் அவர் முதல் நிலை நடிகர். ஆனால் தமிழில் அவரை விட விஜய்க்குதான் முக்கியத்துவம்.

ஆனாலும் மோகன்லாலின் சீனியாரிட்டி மற்றும் அவர் மீது தான் வைத்துள்ள மரியாதையைக் காட்டும் வகையில், படத்தில் அவருக்கே முதலிடம் தருமாறு விஜய்யே இயக்குநர் நேசன் மற்றும் தயாரிப்பாளரைக் கேட்டுக் கொண்டாராம்.

ஜில்லாவில் டாப் மோகன் லால்தான்... மகிழ்ச்சியுடன் விட்டுக் கொடுத்த விஜய்!

டைட்டிலில் யார் படத்தை முதலில் போடுவது என்ற குழப்பத்தில் இயக்குநர் தவித்தபோது, 'அது ஒரு மேட்டரே இல்ல. அவர் அனுபவம்தான் என் வயசு. எனவே மோகன் லால் பெயரை முதலிலும் என் பெயரை அடுத்ததாகவும் போடுங்க,' என்று கேட்டுக்கொண்டாராம்.

அதேபோல சம்பளம் தரும் விஷயத்தில் விஜய்க்கு அதிகமாகத் தந்து, மோகன் லாலுக்கு குறைவாகத் தருவதா என்று யோசித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி.

இதுகுறித்து அவர் விஜய்யிடம் வெளிப்படையாகப் பேசியபோது, ஒன்றும் பிரச்சினையில்லை... அவருக்கே என்னைவிட அதிக சம்பளம் கொடுங்க. அதுதான் அவரைப் போன்ற கலைஞர்களுக்கு நாம் செய்யும் மரியாதை," என்றாராம்.

இந்த இரண்டு விஷயங்களையும் கேள்விப்பட்டு இனிய அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார் மோகன்லால். காரணம் அவரது இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் அவர் பெறும் முதல் அதிக சம்பளம் இதுவே. மலையாளத்தில் என்னதான் பெரிய படம் என்று சொன்னாலும், அதன் பட்ஜெட் மிஞ்சிப் போனால் ரூ 15 கோடிதான் (எகா - பழஸிராஜா). லட்சங்களில் சம்பளம் பெற்று வந்த மம்முட்டி - மோகன் லால் இப்போதுதான் கோடிகளில் வாங்க ஆரம்பித்துள்ளனர்.

இதில் ரஜினி, கமலுக்குப் பின் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவான விஜய்யை விட அதிக சம்பளம் என்றால் யோசித்துப் பாருங்கள்..!

 

விஷாலுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படத்திற்கு ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷால் தயாரித்து நடித்த ‘பாண்டியநாடு' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ‘நான் சிகப்பு மனிதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் லட்சுமி மேனன், ஜெகன், சுந்தர் ராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விஷாலுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்

விஷால் தயாரிக்கும் இந்த படத்தை திரு இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். யு.டிவி நிறுவனம் வெளியிடுகிறது.

‘நான் சிகப்பு மனிதன்' படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கவிருக்கும் படத்தை நடித்து தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஷால். படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசனிடம் பேசி ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம்.

‘நான் சிகப்பு மனிதன்' குறுகிய கால தயாரிப்பு தான் என்பதால், விரைவில் ஹரி - விஷால் - ஸ்ருதிஹாசன் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

 

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் குள்ளமணி காலமானார்

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் குள்ளமணி காலமானார்

சென்னை: உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் குள்ளமணி நேற்றிரவு காலமானார்.

கரகாட்டக்காரன், பில்லா, இணைந்த கைகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் குள்ளமணி. தற்போது 65 வயதாகும் குள்ளமணி கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று இரவு 9 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

அன்னாருடைய உடல் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள மரமடக்கி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப் படுகிறது.

மறைந்த நகைச்சுவை நடிகர் குள்ளமணிக்கு ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள்.

 

அறிவித்தபடி வெளிவரவில்லை ஜில்லா ட்ரைலர்!

சென்னை: கிறிஸ்துமஸ் நாளில் விஜய்யின் அறிவித்தபடி வெளிவரவில்லை ஜில்லா ட்ரைலர்!  

இந்த ட்ரைலரை ரசிகர்களுக்கு விஜய் தரும் தீபாவளிப் பரிசு என்று வர்ணித்திருந்தனர். ஆனால் எதிர்ப்பார்த்த பரிசு கிடைக்காததால் ஏமாற்றத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

பொங்கலுக்கும் முன்பே ஜனவரி 10-ம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கும் நிலையில், இன்னும் படத்தின் ட்ரைலரே ரெடியாகவில்லையா என்ற கேள்வி எழ ஆரம்பித்துள்ளது.

இந்தப் படத்தில் விஜய் - மோகன் லால், காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இமான் இசையமைக்க, ஆர்டி நேசன் இயக்கியுள்ளார்.

எப்படியும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் படத்தின் ட்ரைலரை வெளியிட்டுவிடுவோம் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜில்லா குழு.

 

நடிகர் விவேக்குக்கு ‘பசுமை காவலர்’ விருது!

நடிகர் விவேக்குக்கு ‘பசுமை காவலர்’ விருது!

சென்னை: நடிகர் விவேக்குக்கு பசுமைக் காவலர் விருது வழங்கினார் நீதிபதி ஜோதிமணி.

பதிவுத் துறையின் ஓய்வு பெற்ற கூடுதல் தலைவர் ஆ.ஆறுமுக நயினார் ‘ரியல் எஸ்டேட் குற்றங்கள்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள காஸ்மோ பாலிடன் கிளப்பில் நேற்று இரவு நடைபெற்றது.

ஆ.ஆறுமுக நயினார் எழுதிய மற்றொரு புத்தகமான ‘ஸ்டாம்ப் லாஸ் தமிழ்நாடு' என்ற புத்தகத்தின் 3-வதுபதிப்பை நீதிபதி ப.ஜோதிமணி வெளியிட்டார். அதை நடிகர் விவேக் பெற்றுக்கொண்டார்.

பின்னர் நடிகர் விவேக்குக்கு ‘பசுமை காவலர்' என்ற விருதை நீதிபதி ப.ஜோதிமணி வழங்கினார்.

விழாவில் நீதிபதி ப.ஜோதி மணி பேசுகையில், ''மரங்கள் அழிவதால்தான் மழை பெய்ய மறுக்கிறது. மரம் மண்ணரிப்பை தடுக்கும். மலைச்சரிவையும் தடுக்கும். எனவே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சொன்னபடி நடிகர் விவேக் மரங்களை நட்டுவருகிறார். இது பெரிய சமூகப்பணியாகும்.

நடிகர் விவேக் 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார் அதற்காக அவரை பாராட்டுகிறேன்," என்றார்.

நடிகர் விவேக் பேசுகையில், ''முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அன்பு வேண்டுகோளின்படி தமிழ்நாட்டில் மரக்கன்றுகளை நட்டு வருகிறேன். இதுவரை 21 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு முடித்துள்ளேன். 1 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்று அப்துல்கலாம் கூறியிருக்கிறார்.

நான் மரக்கன்றுகளை நடுவதை ஊக்கப்படுத்தி இந்த விழாவில் எனக்கு ‘பசுமை காவலர்' விருது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதை தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர் நீதிபதி ப.ஜோதிமணி வழங்கி உள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தீர்ப்பாயத்தில் இருக்கும் நீதிபதி தந்தது மகிழ்ச்சியாக, பெருமையாக உள்ளது. இந்த விருது எனக்கு ஊக்கம் அளிக்கிறது,'' என்றார்.

 

உங்க வாய்ப்பெல்லாம் சிவகார்த்திகேயனுக்குப் போகுதாமே!- தனுஷை ஏற்றிவிட்ட நாரதர்கள்!

உங்க வாய்ப்பெல்லாம் சிவகார்த்திகேயனுக்குப் போகுதாமே!- தனுஷை ஏற்றிவிட்ட நாரதர்கள்!

வார்த்தைக்கு வார்த்தை சிவகார்த்திகேயனை தன் தம்பி என்று புகழ்ந்து வந்த தனுஷ், இப்போதெல்லாம் அப்படிச் சொல்வதில்லையாம்.

காரணம் இருவருக்குமிடையிலான நட்பில் விழுந்த விரிசல்தான் என்கிறார்கள்.

கலக்கப் போவது யார் நிகழ்ச்சியில் அறிமுகமாகி, டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக கலக்கிய சிவகார்த்திகேயன் மெரினாவில் முக்கிய பாத்திரத்தில் அறிமுகமானார்.

அடுத்து தனுஷுடன் 3 படத்தில் நடித்தார். மனம் கொத்திப் பறவையில் தனி ஹீரோவாக வந்தார். ஆனால் இந்த மூன்று படங்களிலும் அவருக்குக் கிடைக்காத வெற்றி, தனுஷ் தயாரித்த எதிர்நீச்சலில் கிடைத்தது.

இருவரும் அண்ணன் - தம்பி எனும் அளவுக்கு பழகி வந்தனர். தனுஷ் வெளியில் சிவகார்த்திகேயனை தன் தம்பி என்றுதான் கூறுவார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர்ந்து இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஒருபுறம் சிவகார்த்திகேயன் வேகமாக வளர, அவரை வளர்த்துவிட்ட தனுஷின் நிலையோ இறங்குமுகமாகத்தான் உள்ளது. இந்த ஆண்டில் தனுஷ் நடித்து வெளிவந்த மரியான், நய்யாண்டி இரண்டு படங்களுமே மாபெரும் தோல்விப் படங்களாக அமைந்தன.

முன்பு சிவகார்த்திகேயன் படத்தில் கவுரவ வேடத்தில் வந்து தனுஷ் புரமோட் பண்ணார். இப்போது நிலைமை தலைகீழ். தனுஷின் அடுத்த படமான வேலையில்லா பட்டதாரியில் கவுரவ வேடத்தில் வந்து தனுஷுக்கு பப்ளிசிட்டி தர வேண்டிய அளவுக்கு வளர்ந்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

இதை தனுஷிடம் ஓதும் விதத்தில் ஓதி, புகைச்சலைக் கிளப்பியுள்ளார்களாம் கோடம்பாக்க நாரதர்கள். 'உங்களுக்கு வரவேண்டிய கதைகள்தான் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பது. நீங்களே உங்களுக்கு போட்டியாக ஒருத்தரை உருவாக்கிட்டீங்களே.. சினிமாவில் இந்த விஷயத்தில் சொந்தத் தம்பியாகவே இருந்தாலும் உஷாரா இருக்கணும்,' என்று சொல்லிவைத்திருக்கிறார்கள்.

விளைவு, தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவை உண்டாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ், சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிக்க இருந்தார். இப்போது அதுபற்றி எந்த இறுதி முடிவும் எடுக்காமல் உள்ளாராம்.

 

மூன்று நாட்களில் மூன்று மில்லியன் டாலர்கள்: அமெரிக்காவில் தூம் 3 சாதனை

வாஷிங்டன்(யு.எஸ்): ஆமிர்கான், அபிஷேக் பச்சன் நடித்த தூம் 3 திரைப்படம் அமெரிக்காவில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரையிலும் வட அமெரிக்காவில் வெளியான இந்தியப் படங்களிலேயே, வெளியான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய முதல் மூன்று நாட்களில், தினம்தோறும் 1 மில்லியன் டாலர்கள் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. திங்கட்கிழமை 450 ஆயிரம் டாலர்கள் வசூலாகியுள்ளது.

மூன்று நாட்களில் மூன்று மில்லியன் டாலர்கள்: அமெரிக்காவில் தூம் 3 சாதனை

அமெரிக்காவில் இந்தியில் மட்டுமே வெளியாகியிருந்தாலும், தமிழ், தெலுங்கு மற்றும் அனைத்து மொழி பேசும் இந்தியர்களும் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள். முதல் மூன்று நாட்களில் பெரும்பாலான ஊர்களில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆனது குறிப்பிடத்தக்கது.ஒவ்வொரு தியேட்டரிலும்(மல்டிப்ளக்ஸ்) மூன்று நான்கு திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது.

மூன்று நாட்களில் மூன்று மில்லியன் டாலர்கள்: அமெரிக்காவில் தூம் 3 சாதனை

தூம் 3 படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் அமெரிக்காவின் சிகாகோ நகரிலும், க்ளைமாக்ஸ் காட்சி பிரசித்து பெற்ற ஹூவர் டேமிலும் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

 

நய்யாண்டி பிரச்சினை எனக்கு நல்லதாகவே முடிந்துள்ளது! - நஸ்ரியா

‘நய்யாண்டி' படத்தில் ‘டூப்' நடிகையை வைத்து தொப்புள் காட்சியைப் படமாக்கி விட்டதாக எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் ஸ்டேஷன் வரை போன நஸ்ரியா, அதுகுறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு நஸ்ரியாவை படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குநர்கள் தயங்கி வருகின்றனர்.

இனி அப்படியெல்லாம் பிரச்சினை கிளப்ப மாட்டேன் என்று இயக்குநர்களைச் சந்தித்து உறுதி கூறி வருகிறார் நஸ்ரியா.

நய்யாண்டி பிரச்சினை எனக்கு நல்லதாகவே முடிந்துள்ளது! - நஸ்ரியா

இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த திருமணம் என்னும் நிக்காஹ் படத்தின் செய்தியாளர் சந்திப்புக்கு வந்தார் நஸ்ரியா. இவர்தான் அந்தப் படத்தின் நாயகி.

எடுத்த எடுப்பிலேயே அவரிடம், நய்யாண்டி சர்ச்சையில் பட வாய்ப்புகளை இழந்துவிட்டதாக சொல்கிறீர்களே... என்று கேட்டனர் பத்திரிகையாளர்கள்.

இதற்கு பதிலளித்த அவர், "இது திருமணம் எனும் நிக்காஹ் பட நிகழ்ச்சி. இங்கு இந்தப் படம் தொடர்பாக மட்டுமே கேளுங்க," என்றார்.

பின்னர், இதே கேள்வியை அவரிடம் தனியாக கேட்டபோது, "நான் எந்த படத்தில் இருந்தும் நீக்கப்படவில்லை. ஒப்பந்தமான படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சர்ச்சை காரணமாக நல்ல பட வாய்ப்புகளை இழந்து விட்டதாகவோ என்னை புறக்கணிப்பதாகவோ கருதவில்லை. ‘நய்யாண்டி' படத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் எனக்கு சாதகமாகவே அமைந்துள்ளன.

என் குணம் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. நான் எந்த மாதிரி கேரக்டரில் நடிப்பேன் எதில் நடிக்க மாட்டேன் என நய்யாண்டி படசர்ச்சை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. டைரக்டர்கள் என்னை புதுப்படங்களில் நடிக்க அணுகும்போது என் கேரக்டர் மற்றும் காட்சி விவரங்களை விளக்கமாக கூறிவிடுகின்றனர். படப்பிடிப்பு துவங்கிய பிறகு எந்த சிக்கலும் ஏற்படவில்லை," என்றார்.

 

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் பிரியாணி செம வசூல்!

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவில் நாற்பது திரைகளில் வெளியான அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் பிரியாணி செம வசூல்!  

சமீபத்தில் வெளியான படங்களோடு ஒப்பிடுகையில் தமிழ் சினிமாவில் இது புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

19 திரைகளில் மட்டுமே வெளியான என்றென்றும் புன்னகை 27 ஆயிரம் டாலர்களை வசூலித்துள்ளது.

திங்கள் கிழமை 16 திரைகளில் பிரியாணி 4100 டாலர்களும், 11 திரைகளில் என்றென்றும் புன்னகை 3700 டாலர்களும் வசூலித்துள்ளன.

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் பிரியாணி செம வசூல்!

ஒரே நேரத்தில் அமெரிக்காவில் வெளியான இந்த இரண்டு படங்களையும் ஆத்மஸ் (ATMUS) எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பார்த்தவர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களினால் என்றென்றும் புன்னகை வசூல் அதிகரித்து வருவதாகவும் அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

பொங்கலுக்கு வீரம் மற்றும் ஜில்லா ஆகிய இரண்டு படங்களையும் ஆத்மஸ் எண்டெர்டெயின்மண்ட் நிறுவனமே அமெரிககாவில் வெளியிடுகிறது.

 

இளையராஜா மூன்று நாள்களில் வீடு திரும்புகிறார்!

இளையராஜா மூன்று நாள்களில் வீடு திரும்புகிறார்!

இசைஞானி இளையராஜாவின் இதய ரத்தக் குழாய்களில் இருந்த இரு அடைப்புகள் நீக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்து வரும் இளையராஜா, இன்னும் மூன்று தினங்களில் வீடு திரும்புகிறார்.

இதனால் அவரது மலேசிய இசை நிகழ்ச்சி தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜா வருகிற 28-ந் தேதி மலேசியாவில் நடைபெறும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்கான ஒத்திகை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் பிற்பகல் இந்த ஒத்திகையில் இளையராஜா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் லேசான அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆபரேஷன் செய்யாமல் டாக்டர்கள் அகற்றினர்.

இதையடுத்து நேற்று காலை வரையிலும் அவசர சிகிச்சை பிரிவிலேயே இளையராஜா அனுமதிப்பட்டிருந்தார். பிற்பகலில் அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை தேறி வருகிறது.

இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பிலேயே இளையராஜா இருப்பார் என்றும், அதன் பிறகே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

 

புத்தாண்டு கொண்டாட்டங்கள்... நட்சத்திர ஓட்டல்களில் குத்தாட்டம் போடத் தயாராகும் நடிகைகள்!

சென்னை: புத்தாண்டு வந்தாலே போதும்... நட்சத்திர ஓட்டல்களில் கவர்ச்சிக் குத்தாட்டம் போடத் தயாராகிவிடுவது நடிகைகள் வழக்கம்.

சில நடிகைகளுக்கு அவர்கள் பெறும் ஒரு படத்தின் சம்பளத்தையே சன்மானமாகத் தருவதுண்டு.

நடிகைகளின் கவர்ச்சி ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே சரக்கடித்தபடி விருந்து சாப்பிடுவதுதான் இப்போதைய புத்தாண்டுக் கொண்டாட்டம்.

இந்தி நடிகர், நடிகைகள் புத்ததாண்டு நிகழ்ச்சிகளில் கோடிகளில் சன்மானம் வாங்குகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள்... நட்சத்திர ஓட்டல்களில் குத்தாட்டம் போடத் தயாராகும் நடிகைகள்!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சென்னை நட்சத்திர ஓட்டலில் 7 நிமிடம் நடனம் ஆடுகிறார். இதற்காக ரூ.6 கோடி சம்பளம் பேசியுள்ளாராம்.

நடிகை சார்மி தெலுங்கில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். அவரை புத்தாண்டில் நடனம் ஆட வைக்க ஒரு ஓட்டல் நிர்வாகம் ரூ.18 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.

ஸ்வேதா பாசு ரூ.7 லட்சத்துக்கு ஆடுகிறார்.

தமன்னா, காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தாவிடமும் புத்தாண்டு நடனம் ஆட பேச்சுவார்த்தை நடக்கிறது.

அவர்கள் ஆடும் ஓட்டல்களின் விபரம் வெளியாகவில்லை.

 

தலைமுறைகள் படம் பார்த்தார் ரஜினி... பாலுமகேந்திரா, சசிகுமாருக்குப் பாராட்டு!

தலைமுறைகள் படம் பார்த்தார் ரஜினி... பாலுமகேந்திரா, சசிகுமாருக்குப் பாராட்டு!

தனக்குப் பிடித்த படங்களை உடனுக்குடன் பாராட்டிவிடுவது ரஜினி வழக்கம்.

சமீபத்தில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘தலைமுறைகள்' படத்தையும் பார்த்தார் ரஜினி.

இந்தப்படம் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தாத்தாவாக பாலுமகேந்திராவும். பேரனாக மாஸ்டர் கார்த்திக்கும் நடித்திருக்கிறார்கள். சசிகுமார் தனது ‘கம்பெனி புரடக்‌ஷன்' சார்பாக படத்தை தயாரித்திருக்கிறார்.

படம் பார்த்து முடித்ததுமே இயக்குனர் பாலுமகேந்திராவையும் சசிகுமாரையும் போனில் அழைத்து நீண்டநேரம் பாராட்டியதோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தமிழுக்கு மிகப் பெரிய மரியாதை செய்துவிட்டீர்கள் என்று அவர் தனது பாராட்டில் தெரிவித்தார்.

28 வருடங்களுக்கு முன்பு பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

ஆனால் ரஜினி நடித்த முள்ளும் மலரும் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திரா இருந்துள்ளார்.

 

வீரம் படத்துக்கு யு சான்று - தணிக்கைக் குழு பாராட்டு!

அஜீத் நடித்த வீரம் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

விஜயா நிறுவனம் தயாரித்து சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகும் வீரம் படத்தின் சிறப்புக் காட்சி தணிக்கைக் குழுவுக்கு நேற்று போட்டுக் காட்டப்பட்டது.

வீரம் படத்துக்கு யு சான்று - தணிக்கைக் குழு பாராட்டு!

படம் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறிய தணிக்கைக் குழு, எந்த கட்டும் இல்லாமல், அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்று யு சான்று வழங்கியுள்ளது.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு மிகுந்த சந்தோஷப்பட்டாராம் அஜீத். படத்தின் இயக்குநருக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

வீரம் படத்துக்கு யு சான்று - தணிக்கைக் குழு பாராட்டு!

ஆனால் படம் வெளியாகும்போது, அதைப் பார்த்து ரசிக்க அஜீத் லோக்கலில் இருக்க மாட்டார். ரெஸ்ட் எடுக்க வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.