கஞ்சா கருப்புவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பாலா என்றாலும், அவரை பிரபல காமெடியனாக்கிய பெருமை அமீருக்கே உண்டு.
ஆனால் நேற்று நடந்த கஞ்சா கருப்புவின் சொந்தப் படமான வேல்முருகன் போர்வெல்ஸ் இசை வெளியீட்டு விழாவில் நிற்பதற்கு இடமின்ற ஓரத்தில் நின்றார் இயக்குநர் அமீர்.
கஞ்சா கருப்பு ஹீரோவாக நடித்து தயாரிக்கும் புதிய படம் வேல்முருகன் போர்வெல்ஸ். அவருக்கு ஜோடியாக ரகசியா நடித்துள்ளார்.
பாலா படத்தில் கருப்பு என்ற கதாபாத்திரத்தில் கஞ்சா விற்பவராக அறிமுகமாகியதால் கஞ்சா கருப்பு என்ற பெயர் அவருக்கு நிரந்தரமாகிவிட்டது. அமீரின் ராம் படத்தின் மூலம் பெரிய காமெடியனாகிவிட்டார் கருப்பு.
பருத்திவீரன், சுப்ரமணியபுரம், சண்டகோழி என அடுத்தடுத்து வரிசையாக நடித்த படங்களின் வெற்றியில் கருப்புக்கும் கணிசமான பங்குண்டு.
கஞ்சா கருப்புவின் வேல்குமரன் போர்வெல்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அமீர் பேசுகையில், "ராம் படத்தின் தியேட்டர் விசிட்டிற்கு சென்றிருந்த போது நான் உள்ளே போனதும், தியேட்டர் ஊழியர்கள் கஞ்சா கருப்புவை உள்ளே விடவில்லை. இவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறியபின்தான் உள்ளேவிட்டார்கள்.
ஆனால் அதே கஞ்சா கருப்புவை படத்தின் இடைவேளையில் ரசிகர்கள் தோள் மீது தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அதைப்பார்த்து சந்தோஷப்பட்டதை விட நான் இப்போது தான் அதிகம் சந்தோஷப்படுகிறேன்.
இன்று நான் தாமதமாக வந்ததால் உட்கார இடமில்லாமல் கதவோரமாக நின்றுவிட்டேன். தமிழ்த் திரையுலகமே கொண்டாடும் விஜய் சேதுபதி எனக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார்.
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர் முருகதாஸ் உள்ளே அமர்ந்திருந்தார். சினிமாவில் கஞ்சா கருப்பு வளர்ந்திருக்கிறார், வெற்றியடைந்திருக்கிறார் என்பதற்கு இதைவிட பெரிய எடுத்துக்காட்டு வேறு எதுவும் கிடையாது. சந்தோஷமாக உள்ளது," என்றார்.
Post a Comment