புத்தக திருவிழாவில் ஒரு புதுமை... பென் ட்ரைவில் பாடல் வெளியீடு!

|

அறிவுத் திருவிழாவான புத்தக திருவிழாவில் அன்றாடம் ஏராளமான புத்தகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் நேற்று நடந்த நிகழ்வு முற்றிலும் வித்தியாசமானது.

இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வார் அவர்களின் கொள்கைகளை முன்னெடுத்து செல்லும் ஒரு பாடலை பென் டிரைவில் வெளியிட்டார்கள் அவரது அபிமானிகள். ‘பூவுலகின் நண்பர்கள்' ஸ்டாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாடல் அடங்கிய பென் டிரைவை சாகித்ய அகடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் வெளியிட, மயன் ரமேஷ் பெற்றுக் கொண்டார்.

புத்தக திருவிழாவில் ஒரு புதுமை... பென் ட்ரைவில் பாடல் வெளியீடு!

பாடலுக்கு இசையமைத்த தாஜ்நூர் அந்த பாடல் உருவான விதத்தைப் பகிர்ந்து கொண்டார்.

"பொதுவாகவே தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயங்களை எங்காவது கவிதையாக படிக்க நேர்ந்தாலோ, காதில் கேட்க நேர்ந்தாலோ அதை உடனே பாடலாக வடிவமைப்பது என்னுடைய வழக்கங்களில் ஒன்று. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு. அவரது மறைவு எனக்குள் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்த சமயத்தில்தான் சேலத்தை சேர்ந்த என் நண்பரான ஈசன் இளங்கோ மருத்துவர் சசியுடன் இணைந்து எழுதிய இந்த பாடல் வரிகளை எனக்கு செல்போனில் அனுப்பி வைத்தார். அதை படித்தவுடன் நான் பரவசமானேன். அதற்கு ட்யூன் போட்டு பாடலாக்கிவிட வேண்டும் என்று தோன்றியது. உடனடியாக வேலைகளை துவங்கினேன்.

பாடகர் வேல்முருகனை வரவழைத்து பாட வைத்தேன். அவரது கணீர் குரலில் பாடல் இன்னும் மெருகு பெற்றது. அந்த பாடலை பொங்கல் தினத்தன்று சேலம் வீதிகளில் ஒலிபரப்பி கொண்டாடிவிட்டார்கள் ஈசன் இளங்கோவும் அவரது நண்பர்கள் குழுவினரும்.

நம்மாழ்வார் போல வேடமணிந்த ஒருவர் கைநிறைய இனிப்புகளை அள்ளி மக்களுக்கு வழங்கியபடி வீதிய வீதியாக சென்றார். அப்போது இந்த பாடலை ஒலிபெருக்கி மக்களை சந்தோஷ வெள்ளத்தில் மிதக்க வைத்தார்கள் ஈசன் சுற்றுசூழல் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள். மதங்களையெல்லாம் தாண்டி எப்படி கிறிஸ்துமஸ் தாத்தாவை ரசிக்கிறோமோ, குழுந்தைகளுக்கும் பிடித்த தாத்தாவாக அவர் இருக்கிறாரோ, அதுபோல உழவன் தாத்தவாக கொண்டாடப்பட வேண்டியவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். இனி ஒவ்வொரு பொங்கலுக்கும் இந்த பாடல் தெருவெங்கும் ஒலிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்," என்றார்.

விழாவுக்கு வந்த பாடகர் வேல்முருகன்,

அறிவை வாங்கி பரிமாறு
அழிவை எதிர்த்து போராடு
திடமான உடலோடு
இயற்கை உரமோடு...

என்று தன் கணீர் குரலில் அங்கேயே நின்று பாட, புத்தக திருவிழாவே சிலிர்த்துப் போனது. நிகழ்ச்சியில் ஏராளமான பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டார்கள். தமிழகத்திலேயே முதன் முறையாக பென் டிரைவில் வெளியிடப்பட்ட பாடல் வெளியீட்டு விழா இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment