யுடியூப் ஹிட்டுக்காக கொண்டாட்டம் தேவையில்லை: இயக்குநர் வசந்தபாலன்

|

சென்னை: யுடியூப்பில் வெளியான ட்ரெயிலர்,டீசர் ஹிட்டுக்கெல்லாம் கொண்டாட்டம் தேவையில்லை என்று வசந்தபாலன் கூறியுள்ளார். சினிமாக்காரர்கள் களத்தில் இறங்கி போராட்டும் நேரம் வந்து விட்டதாகவும் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘பூஜை' படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதற்காக விஷால் காரைக்குடியிலேயே முகாமிட்டு நடித்து வருகிறார்.

யுடியூப் ஹிட்டுக்காக கொண்டாட்டம் தேவையில்லை: இயக்குநர் வசந்தபாலன்

இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் கேபிள் சேனல்களில் சமீபத்தில் வெளியான ‘வடகறி' மற்றும் ‘உன் சமையலறையில்' ஆகிய படங்களை திருட்டுத்தனமான ஒளிபரப்புவதாக விஷாலுக்கு தகவல் கிடைத்தது.

அவை இரண்டுமே தனது படங்கள் இல்லாவிட்டாலும், இது குறித்து காரைக்குடியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து, போலீசாருடன் நேராக சம்பந்தப்பட்ட லோக்கல் கேபிள் சேனல்களுக்கு நேரடியாக சென்றார். இந்த விவகாரத்தில் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காரைக்குடியில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், இதுபோன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடும் சேனல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உதவுமாறு பத்திரிகையாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இயக்குநர் வந்தபாலன் பாராட்டு

திருட்டு விசிடி எதிராக போராடியதற்காக நடிகர் விஷாலை பலரும் பாராட்டி வருகிறார்கள். இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விஷாலை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

திருட்டு விசிடி ஒளிபரப்பு

அப்பதிவில், "திருட்டு விசிடிக்கு எதிரான விஷாலின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.விஷாலை போன்று ஒவ்வொரு கதாநாயகனும் இயக்குநரும் ஏன் ஒவ்வொரு சினிமாக்காரனும் களத்தில் இறங்கினால் தான் இந்த திருட்டு விசிடி பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும். ஆம்னி பஸ்ஸில் ஏன் அரசு நெடுந்தொலைவு பேருந்துகளில் திருட்டு விசிடி ஒளிப்பரப்புகிறார்கள்.

தியேட்டர்களில் கூட்டமில்லை

சென்னை கோயமுத்துரர் தவிர அனைத்து சிறு நகரங்களில் சனிக்கிழமை மாலைக்காட்சி, இரவுக்காட்சி, ஞாயிறு மாலைக்காட்சியை தவிர திரையரங்குகளில் கூட்டமே இல்லை. பெருநகரங்களை தவிர சிறு நகரங்களில் திரையரங்குகளில் படம் ஓடி சம்பாதிப்பது சிறு படங்களுக்கு பெரும் கனவு தான்.

பெரிய நடிகர்கள் படம்

ரஜினி, கமல், அஜீத்,விஜய்.சூர்யா படங்களுக்கு கூட்டம் வருகிறது. மற்ற அனைத்து கதாநாயகர்களின் நிலைமை மிக மோசம். படம் நல்லாயிருக்கிறது என்ற செய்தி பரவி கூட்டம் திரையரங்குக்கு வர நாள் ஆகிறது.

வரிவிதிப்பு

சேட்டிலேட் விற்பனையையும் சென்னை நகரத்தில் படம் ஓடுவதையும் நம்பி தான் சினிமா இருக்கிறது.ஆடியோ பிசினஸ் இல்லை.இதில் U/A...A படங்களுக்கு 30% வரி விதிப்பு வேறு சினிமாவை ஆட்டிப்படைக்கிறது.

யுடியூப் ஹிட்டுக்கு

யுடியூப்பில் நம் டிரைலரை 21 லட்சம் பேர் பார்த்து விட்டார்கள் என்ற கொண்டாட்டம் ஒரு பக்கம் என்றால் இந்த 21 லட்சம் பேர் நம் படத்தின் பாடல்களை இலவசமாக டவுண்லோடு செய்து கேட்பார்கள் என்று அர்த்தம்.

சந்தோசப்பட வேண்டாம்

படம் வெளிவந்தால் இந்த 21 லட்சம் பேரும் திரையரங்குக்கு வருபவர்கள் அல்ல. பாதி பேர் முடிந்தால் நம் படத்தையும் டவுண்லோடு செய்து பார்த்துவிடுவார்கள் என்று தான் அர்த்தம். யுடியூப் ஹிட்டிற்காக நாம் சந்தோசப்பட ஒன்றுமில்லை நண்பர்களே.

போஸ்டர் ஒட்ட முடிவதில்லை

சினிமா போஸ்டர்களின் முலம் விளம்பரத்தை நிறுவமுடியாத நிலை உள்ளது. ஏனெனில் போஸ்டர் ஒட்டுவதற்கான சுவர்கள் குறைந்து விட்டன. கட்டுப்பாடுகள் பெருகி விட்டன. ஒட்டப்பட்ட போஸ்டர்கள் ஒரு நாள் கூட சுவரில் இருப்பதில்லை அதைக்கிழித்துவிட்டு அதன் மீது அடுத்த போஸ்டர் ஒட்டப்படுகிறது.

தொலைக்காட்சி விளம்பரங்கள்

தனியார் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வது தான் ஓரே வழி. அதன் விளம்பர செலவு மிக அதிகமாக இருக்கிறது. சில கோடிகளை முழுங்குகிறது.

சினிமாக்காரர்கள் களமிறங்கவேண்டும்

நாம் இலவசமாக கொடுக்கும் பாடல்களை காமெடி காட்சிகளை சண்டை காட்சிகளை விதவிதமாக பிரித்துபிரித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் போடுகிறார்கள். ஆனால் நாம் விளம்பரமுன்னு போய் நின்றால் பல லட்சங்களை கேட்கிறார்கள். ஒட்டுமொத்தமாக சினிமாக்காரர்கள் களத்தில் இறங்கி நம் வாழ்வாதாரத்திற்கு போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது." என்று வசந்தபாலன் கூறியுள்ளார்.

 

Post a Comment