மும்பை: கோச்சடையான் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்தை தங்களின் தலைமைக் குழுவில் இணைத்துக் கொண்டது இந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா.
கிரியேட்டிவ்-செயல்திட்ட இயக்குனர் மற்றும் தென்னிந்தியாவின் ஈராஸ்நவ் உள்ளிட்ட டிஜிட்டல் முன்முயற்சிகளின் தலைவர் என இரு பெரிய பொறுப்புகளில் சவுந்தர்யாவை நியமித்திருப்பதாக ஈராஸ் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.
இந்த இரட்டைப் பொறுப்பின் மூலம், ஈராஸ்நவ் உள்பட அனைத்து புதிய ஊடக தளங்களுக்கும் தலைவராகிறார் சவுந்தர்யா. இந்நிறுவனத்தின் படங்களுக்கு தனது படைப்புத் திறனை வழங்க உள்ளார்.
ஈராஸ் நிறுவனத்தின் தலைமைக் குழுவிற்கு சவுந்தர்யாவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜோதி தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
மேலும், ஈராஸ்நவ், மொபைல், டிடிஎச், ஐபிடிவி மற்றும் பிராண்பேண்ட் உள்ளிட்ட டிஜிட்டல் துறையில் நிறுவனம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிப்பதாகக் கூறிய அவர், டிஜிட்டல் களத்தில் சவுந்தர்யாவின் அனுபவம், நிறுவனத்தின் செயல்திட்டங்களை வழிநடத்தும் அளவுக்கு அவரை சிறந்த தலைவராக உருவாக்கும் என்றார்.
ஈராஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் படைப்பாற்றல் செயல்முறைகளில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக சவுந்தர்யா கூறினார்.
ஈராஸ் நிறுவனத்தின் புதிய பொறுப்புகளில் சவுந்தர்யா கவனம் செலுத்தினாலும், தனக்கு விருப்பமான தொழிலான திரைப்பட இயக்குனர் பணியையும் தொடருவார்.
அடுத்து ஈராஸ் தயாரிக்கும் ஒரு படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இவர் ஏற்கெனவே இயக்கிய ‘கோச்சடையான்' படத்தின் தயாரிப்பாளர்கள் ஈராஸ் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment