கத்தி படம் வெளியாகும் அரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள்! - அய்ங்கரன் கருணா மனு

|

'கத்தி' படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் தயாரிப்பாளர் கருணாமூர்த்தி மனு கொடுத்தார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள கத்தி படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

கத்தி படம் வெளியாகும் அரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள்! - அய்ங்கரன் கருணா மனு

ஆனால் லைகா நிறுவனத்தின் பெயரோடு வெளியிடுவதை கடுமையாக எதிர்த்தனர் தமிழ் அமைப்புகள் மற்றும் கட்சிகள்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சுபாஷ்கரன் நெருக்கமாக இருக்கிறார், இலங்கை ஏர்லைன்சுடன் கூட்டாளியாக உள்ளார் என்று குற்றம்சாட்டின.

எதிர்ப்பை மீறி ‘கத்தி' படத்தை நாளை மறுநாள் (22-ந்தேதி) தீபாவளியன்று ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. இந்த நிலையில்தான் சத்யம், உட்லண்ட்ஸ் அரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இன்று வெளியான கத்தி விளம்பரங்களில் லைகா நிறுவனப் பெயர் நீக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சமாதானமடையாத போராட்டக்காரர்கள், தாங்கள் கத்தி தயாரிப்பாளர்களுடன் சமரசமாகவில்லை என்று அறிவித்துள்ளனர்.

எனவே இந்தப் படத்துக்கான புக்கிங்கை இந்த நிமிடம் வரை நிறுத்தி வைத்துள்ளன தமிழக திரையரங்குகள். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் எந்தப் பிரச்சினையுமின்றி கத்தி வெளியாகிறது.

இதற்கிடையில் ‘கத்தி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கருணாமூர்த்தி சென்னை கமிஷனரிடம் ‘கத்தி' படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்துள்ளார். லைகா பெயர் இல்லாமல் படத்தை வெளியிடத் தயார் என்று கூறியதாகத் தெரிகிறது.

ஆனால் அப்படி வெளியிட்டாலும் படத்துக்கு எதிர்ப்பு தொடர்வதால், திரையரங்கு உரிமையாளர்கள் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர்.

 

Post a Comment