இசை வெளியீட்டுக்கு முன்பே மொத்தப் பாடல்களும் அவுட்... இயக்குநர் சீனுராமசாமி அதிர்ச்சி!

|

சென்னை: ‘இடம் பொருள் ஏவல்' படத்தின் பாடல்கள் இசை வெளியீட்டுக்கு முன்பே இணையதளங்களில் வெளிவந்து விட்டன. இதனால் இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் டைரக்டர் என்.லிங்குசாமி, அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவரும் தயாரித்து, சீனு ராமசாமி இயக்கியுள்ள படம் ‘இடம் பொருள் ஏவல்'.

இசை வெளியீட்டுக்கு முன்பே மொத்தப் பாடல்களும் அவுட்... இயக்குநர் சீனுராமசாமி அதிர்ச்சி!

இந்த படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் ‘இடம் பொருள் ஏவல்' படத்தின் பாடல்கள் அனுமதி இல்லாமல் இணையதளங்களில் வெளிவந்துள்ளன. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை:

முதல்முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், கவிஞர் வைரமுத்துவும் ‘இடம் பொருள் ஏவல்' படத்தில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். அதனால் 2 பேரின் ரசிகர்கள் மத்தியிலும் படத்தில் பாடல்கள் குறித்த பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. பாடல்களை திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ‘இடம் பொருள் ஏவல்' படத்தின் பாடல்கள் இணையத் தளத்தில் வெளியானது கண்டு அதிர்ச்சி அடைந்தோம். திரைத் துறையில் இருக்கும் அளவுக்கு பாதுகாப்பற்ற தன்மை வேறு எந்த தொழிலும் இருக்குமா என்று தெரியவில்லை. யார் மூலம் எப்படி இந்த பாடல்கள் இணையதளத்தில் வெளியானது என்பது எங்களுக்கு தெரியவில்லை.

மிகுந்த சிரமத்தை எடுத்து உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு இப்படி திருட்டுத்தனமாக மக்களை சென்றடைந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தையும், மன உளைச்சலையும் தருகிறது. இதனை தடுப்பதற்கான வலிமையான முறைகளை விரைந்து உருவாக்க வேண்டிய தேவையும் அவசரமும் உள்ளது. ஆனால் அனைவரும் இந்த நிலையை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.

-இவ்வாறு அந்த அறிக்கையில் சீனு ராமசாமி கூறியிருக்கிறார்.

 

Post a Comment