சென்னை: வரும் ஜனவரி 23-ம் தேதி தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகை
கடந்த 2014-ம் ஆண்டில், த்ரிஷாவும் தயாரிப்பாளர் வருண் மணியனும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகின. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த செய்திகளை மறுத்தார் த்ரிஷா.
த்ரிஷாவுக்கு ஒரு நல்லது நடந்தால் உங்கள் அனைவருக்கும் சொல்வேன் என்று அவர் தாயார் உமா அறிவித்தார்.
ஆனால் இந்த திருமண செய்தி முழுக்க உண்மையானது என்றும், விரைவில் வெளிப்படையாக அறிவிக்கத்தான் போகிறார்கள் என்றும் மீடியா நம்பியது. அதற்கேற்ப, த்ரிஷாவும் வருண் மணியனும் தனி விமானத்தில் சுற்றுலா கிளம்பினார்கள்.
இந்த நிலையில்தான் த்ரிஷாவே தன் திருமணச் செய்தியை அறிவித்துள்ளார்.
இன்று ட்விட்டரில் அவர் வெளியிட்ட தகவலில், "ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு, வரும் ஜனவரி 23-ம் தேதி வருண் மணியனுடன் எனது திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. இது எங்கள் குடும்பத்துக்குள் நடக்கும் மிகவும் தனிப்பட்ட நிகழ்வு," என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் திருமணத் தேதியை அவர் இன்னும் அறிவிக்கவில்லை. "திருமணத் தேதி பற்றி யாரும் ஊகங்கள் பரப்ப வேண்டும். தேதி முடிவானதும் உங்களுக்குத்தான் முதலில் தெரியவரும்," என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் த்ரிஷா திருமணம் குறித்து பல ஆண்டுகளாகத் தொடர்ந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment