பேய் படங்களாகப் பார்த்து வாங்கி வெளியிடும் ராம நாராயணனின் தேனாண்டாள் நிறுவனம், அடுத்து நயன்தாரா பேயாக நடித்துள்ள மாயா படத்தை வாங்கியுள்ளது.
பொட்டான்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பிரபு மற்றும் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கும் படம் இந்த மாயா. அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா - ‘நெடுஞ்சாலை' ஆரி, ‘வல்லினம்' அம்ஜத், ரோபோ சங்கர், கருணாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
நைட் ஷோ
முதலில் படத்துக்கு ‘நைட் ஷோ' என்ற தலைப்பிட்டிருந்தனர். ஆனால் இந்த தலைப்பு நயன்தாராவிற்கு நெருடலை ஏற்படுத்தியதாம். பின்னர் ‘ஆரம்பம்' படத்தில் நயன்தாராவின் கேரக்டரான ‘மாயா'வையே படத்துக்கு டைட்டிலாக்கி விட்டார்கள்.
இறுதிக் கட்டத்தில்
இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டிரைலரும் வெளியாகவிருக்கிறது.
தேனாண்டாள்
இதனிடையே ‘மாயா'வின் தமிழக வெளியீட்டு உரிமையை ராம நாராயணின் ‘ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஏற்கெனவே அரண்மனை, பிசாசு போன்ற பேய் படங்களையும் இந்நிறுவனமே வாங்கி வெளியிட்டது. அதேபோல், அருள்நிதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘டிமான்டி காலனி' படத்தின் வெளியீட்டு உரிமையையும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனமே கைப்பற்றியிருக்கிறது.
ஏற்கெனவே ஒரு மாயா
தொடர்ந்து பேய்ப் படங்களை வெளியிட்டு கல்லா கட்டி வரும் இந்நிறுவனம் தற்போது ‘மாயா'வையும் வெளியிடவிருக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் 1999ல் நெப்போலியன், நக்மாவை வைத்து ‘மாயா' என்கிற பெயரிலேயே இதே தேனாண்டாள் பிலிம்ஸ் ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டது. ஒரே பெயர் கொண்ட இன்னொரு படத்தை அதே நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment