இயக்குநர், நடிகர் கார்வண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 55.
பாலம், புதிய காற்று, மூன்றாம்படி, தொண்டன் உள்பட 6 படங்களை இயக்கியவர் கார்வண்ணன். இவர் சில படங்களைத் தயாரித்துமிருக்கிறார்.
இவர் எடுத்த அனைத்துப் படங்களுமே புதிய விஷயங்களை மையப்படுத்தியிருக்கும்.
பாலம் படத்தில்தான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதல் முறையாக சினிமாவில் நடித்தார்.
கார்வண்ணனின் புதிய காற்று படத்தைத் தழுவி வந்த படம்தான் இயக்குநர் ஷங்கரின் இந்தியன் என்பார்கள்.
கார்வண்ணனின் இளமை பின்னணி மிகுந்த சுவாரஸ்யமானது. அவர் நந்தனம் கல்லூரியில் எம்ஏ படித்தபோது, அன்றைய முதல்வர் அமரர் எம்ஜிஆர் கையால் பரிசு பெற்றிருக்கிறார்.
பின்னொரு நாள் சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த முதல்வர் எம்ஜிஆர் பார்வையில் அவர் பட்டுவிட, காரை நிறுத்தி, தன் உதவியாளரை அனுப்பி கார்வண்ணனை அழைத்து வரச் சொன்னாராம் எம்ஜிஆர். அவரை தன் காரில் ஏற்றிக் கொண்டு, பரிசு பெறும் அளவு நன்றாகப் படித்த மாணவனான நீ, இப்போது என்ன செய்கிறாய் என விசாரித்தாராம். வேலையில்லாமல் அலைந்து கொண்டிருப்பதை கார்வண்ணன் சொன்னதும், முகவரியை வாங்கிக் கொண்டு இறக்கிவிட்டாராம்.
அடுத்த சில தினங்களில் அன்றைய போக்குவரத்து துறை அமைச்சர் முத்துசாமி மூலம் ஒரு புதிய ஆட்டோவைக் கொடுத்தனுப்பியுள்ளார் எம்ஜிஆர். படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும்வரை அந்த ஆட்டோவை ஓட்டி பிழைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1990-ல் திரைப்பட இயக்குநரானார் கார்வண்ணன். அப்போது எம்ஜிஆர் அமரராகிவிட்டிருந்தார்.
அந்த ஆட்டோவை இப்போதும் வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்திருக்கிறார் கார்வண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்வண்ணன் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடக்கின்றன.
Post a Comment