ரஜினி, கமல் என டாப் நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களுக்கு குறிவைத்து வாங்கி வெளியிட்டு வந்த ஈராஸ் நிறுவனம், இப்போது ஒரு புதிய முடிவுக்கு வந்துள்ளது.
தமிழில் அடுத்து இரு புதிய படங்களை நேரடியாக தயாரிக்கிறது. சிறிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படங்களை புதியவர்கள் இயக்குகிறார்கள்.
இந்த இரு படங்களில் ஒன்றிற்கு ‘பேரை தேடிய நாட்கள்' என்று பெயரிட்டுள்ளனர். ரொமான்டிக் படமாக உருவாகும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படத்தை ஆபிரகாம் பிரபு என்பவர் இயக்குகிறார். இவர் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘யாகவராயினும் நா காக்க' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
மேலும், மற்றொரு படத்திற்கு ‘எங்கிட்ட மோதாதே' என்று தலைப்பு வைத்துள்ளனர். ஆக்ஷன் கதையாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நட்டி நடராஜ், ராஜாஜி, விஜயமுருகன், ராதாரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ராமு செல்லப்பா என்ற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். இவர் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா', ‘மயக்கம் என்ன' ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். விரைவில் இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் தங்களின் சந்தையை இன்னும் விரிவாக்கம் செய்யவே இந்த மாதிரி நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக ஈராஸ் தெரிவித்துள்ளது.
Post a Comment