ரஜினி பெயரை மோசடியாக பயன்படுத்திய அந்த பைனான்சியரை விட மாட்டேன்- கஸ்தூரி ராஜா

|

ரஜினி பெயரை மோசடியாகப் பயன்படுத்தி, வழக்குத் தொடர்ந்து என்னை அலைக்கழித்த பைனான்சியர் முகுந்த் போத்ரா மீது வழக்குத் தொடருவேன் என்று இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

திரைப்படங்களுக்கு பைனான்சியராக இருக்கும் முகுந்த் போத்ரா அறுபத்தைந்து லட்சம் கஸ்தூரி ராஜாவிற்கு கடன் கொடுத்ததாகவும் அதை அவர் திருப்பித் தரவில்லை என்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

Kasturiraja to sue on Bothra for misusing Rajini name

அதற்காக போத்ரா கொடுத்த ஆவணங்கள், போத்ராவால் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்று புகார் நிராகரிக்கப்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அங்கும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் ஜார்ஜ் டவுண் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். அங்கும் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த கஸ்தூரிராஜா, "சுமார் மூன்று வருடங்களாக என்னைப் பற்றி அவதூராக செய்திகளைப் பரப்பியும் வருகிறார். அடுத்தடுத்து பொய்வழக்குத் தொடர்ந்ததால் நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் என் குடும்பத்தைச் சேர்ந்த பிரபலமானவரை (ரஜினிகாந்த்) பயன்படுத்தி அதன் மூலம் என்னை மிரட்டி பணம் பறிக்கத் திட்டமிட்டார். இதனால் பொய்வழக்குப் போட்ட அவர் மீது சட்டப்படி மானநஷ்ட வழக்கைத் தொடர்வேன்," என்றார்.

 

Post a Comment