சென்னை: இதுநாள் வரை தமிழ் சினிமாவில் நான் ரொம்பவும் நல்லவன் என்று ஹீரோவை வைத்து படம் எடுத்துக் கொண்டு இருந்தவர்கள், தற்போது ஹீரோவை எவ்வளவு மோசமானவனாக காட்ட முடியுமோ அப்படிக் காட்டவே விரும்புகிறார்கள்.
ரசிகர்களும் ஆண்டி ஹீரோ கதையம்சம்களை மிகவும் லைக் பண்ணுவதால், தொடர்ந்து இதுபோன்ற படங்கள் வெளிவரத் துவங்கி இருக்கின்றன. அந்த வகையில் இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் யானும் தீயவன்.
கலைஞர் டிவி நடத்திய நாளைய இயக்குநர் சீசன் 3 யில் கலந்து கொண்டவர் பிரசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் ஒரு ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக இருக்கும் என்று கூறுகிறார் படத்தின் இயக்குனர் பிரசாந்த் ஜி.கிரிஷ். இவர் இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குனராக இருந்தவர், யானும் தீயவன் படத்தின் படப்பிடிப்பு நேற்றில் இருந்து தொடங்கியுள்ளது.
புதுமுகம் அஸ்வின் கதாநாயகனாக அறிமுகமாக, வர்ஷா கதாநாயகியாக நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடன கலைஞர் மற்றும் நடிகரான ராஜு சுந்தரம் நடிக்க இவரகளுடன் விடிவி கணேஷ், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பிரபல தெலுங்கு திரையுலக இசையமைப்பாளரான அச்சு ராஜாமணி, தமிழில் முதல்முறையாக இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ், படத்தொகுப்பு பிரசன்னா.
பாடல்களை பாடலாசிரியர்கள் கபிலன் மற்றும் மணி அமுதவன் எழுதியுள்ளனர். இப்படத்தின் முதல் பார்வை படங்களை பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம் வடிவமைத்து படமாக்கினார்.
ஸோபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் "பெப்பி சினிமாஸ்" சார்பாக இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
Post a Comment