சென்னை: சினிமாவில் பிஸியாக காமெடி நடிகையாக வலம் வரும் கோவை சரளா சன் டிவியில் குழந்தைகளுக்கான கேம் ஷோவை நடத்தப்போகிறார். அதற்கான முன்னோட்டமே அமர்களமாக தொடங்கியுள்ளது.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் குழந்தைகள் நிகழ்ச்சிகளுக்கு தனி வரவேற்பு உண்டு. சன் டிவியில் இமான் அண்ணாச்சி நடத்தும் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சிக்கு குழந்தைகள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு உள்ளது.
ஞாயிறு மாலையில் குட்டி சுட்டீஸ் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிற்பகல் நேரத்தில் தற்போது ‘செல்லமே செல்லம்' என்ற கேம் ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி மமதி தொகுத்து வழங்கி வந்தார்.
விஜய் டிவியில் ஹலோ தமிழா, சன் டிவியில் ராணி மகாராணி, சூப்பர் குடும்பம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய மமதி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் செல்லமே செல்லம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். என்னவானதோ திடீரென்று தற்போது கோவை சரளா செல்லமே செல்லம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக முன்னோட்டம் ஒளிபரப்பாகிறது.
காஞ்சனா பேய் படங்களில் நடித்த பிறகு குட்டீஸ் மத்தியில் கோவை சரளாவிற்கு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது அதனால்தான் கோவை சரளாவை தொகுப்பாளராக நியமித்துள்ளனர் டிவி நிர்வாகத்தினர்.
சீரியலில்தான் இவருக்குப் பதில் இவர் என்று கார்டு போடுவார்கள். ஆனால் நிகழ்ச்சி தொகுப்பாளரை தூக்கிப் போட எந்த காரணமும் தேவையில்லையே. என்ன நடந்துச்சோ? எது நடந்துச்சோ?
Post a Comment