விஜய் நடித்துள்ள புலி படத்தின் ஸ்டில்களை சிலர் திருட்டுத் தனமாக இணையத்தில் வெளியிட்டு தங்களை டென்ஷனாக்கி வருவதாகக் கூறி, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடித்துள்ள படம் ‘புலி'. இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர், விஜய் பிறந்த தினத்தில் வெளியிட ‘புலி' படக் குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், விஜய் பிறந்தநாளுக்கு 12 மணி நேரத்திற்கு முன்பே இப்படத்தின் புகைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு விட்டார்களாம். இதனால், ‘புலி' படக்குழுவினர் அதிர்ச்சிக்குள்ளானர்கள்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தயாரிப்பாளர்கள் சிபு தமீம்ஸ், பி.டி.செல்வகுமார் ஆகியோர் இணையதளத்தில் திருட்டுத்தனமாக புகைப்படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தற்போது சென்னை கமிஷனர் ஜார்ஜிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
புகாரை பெற்றுக்கொண்ட கமிஷனர், குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரைமுக்கு உத்தவிட்டுள்ளார். எனவே துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், ‘புலி' படத்தின் புகைப்படங்களை வெளியிட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
படத்தில் பணிபுரிந்த அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். புகைப்படங்களை வெளியிட்டவர்கள் யார் என்று தெரிந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, ‘புலி' படத்தின் டீசரை திருட்டுத்தனமாக வெளியிட்ட மிதுன் என்ற வாலிபரை காவல் துறையில் கண்டுபிடித்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகவல்களை நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்த தயாரிப்பாளர் பிடி செல்வகுமார், அதிகாரப்பூர்வமான செய்தி மற்றும் படங்களை விரைவில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்குத் தரவிருப்பதாகக் கூறினார்.
Post a Comment