தஞ்சை: கத்தி திரைப்பட வழக்கு தொடர்பாக நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உள்பட 7 பேரை அக்டோபர் 15-ஆம் தேதி ஆஜராகுமாறு தஞ்சாவூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு. ராஜசேகர். இவர், 'தாகபூமி' என்கிற தன்னுடைய குறும்படத்தை பெரிய திரைப்படமாக வெளியிடக் காத்திருந்த நிலையில், அதை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் 'கத்தி' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டதாகவும், இதற்காக முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி உரிமையியல் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இதே பிரச்னைக்காக தஞ்சாவூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அன்பு. ராஜசேகர் தனது வழக்குரைஞர்கள் கே. சுகுமாரன், எஸ். மகா சண்முகம் மூலம் ஜூன் 4-ஆம் தேதி புதிய வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
இதுதொடர்பாக, பட நிறுவன நிர்வாக இயக்குநர் நீலகண்ட் நாராயணபூர், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், நடிகர் விஜய் உள்பட 7 பேரை அக்டோபர் 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நடுவர் சி. சிவகுமார் செப்டம்பர் 3-ஆம் தேதி உத்தரவிட்டார்.
Post a Comment