சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் த்ரிஷா, ஹன்சிகா மற்றும் பூனம் பஜ்வா நடிப்பில் உருவாகி வந்த அரண்மனை 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு வெளியான அரண்மனை படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது அந்தப் படத்தின் 2 வது பாகத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
இந்தப் படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்க, நாயகிகளாக த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா போன்றோர் நடித்திருக்கின்றனர். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
ஒரு பெரிய அரண்மனை ஒன்றின் முன்பு இரு நாயகிகள் நிற்பது போன்று இந்தப் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. சிகப்பு மற்றும் ஊதா கலர்களில் புடைவை அணிந்து தலை நிறைய மல்லிகைப்பூவை வைத்துக் கொண்டு இருவரும் அரண்மனையைப் பார்த்தது போன்று நின்று கொண்டிருக்கின்றனர்.
இரு நாயகியரில் ஒருவர் த்ரிஷா என்பது தெள்ளத்தெளிவாக தெரிகின்றது மற்றொருவர் ஹன்சிகாவா அல்லது பூனம் பஜ்வாவா என்பது தெரியவில்லை.
நேற்று வெளியான இந்தப் போஸ்டர் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் போஸ்டர் படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பை ரசிகர்கள் அனைவரிடமும் தற்போது உருவாக்கியுள்ளது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, சூரியின் காமெடியில் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருக்கின்றது அரண்மனை 2.
Post a Comment