கபாலி படத்தின் ரஜினியின் தோற்றம் எப்படி இருக்கும்? இந்தக் கேள்வியை தங்களுக்குள் கேட்டுக் கொண்ட ரஜினி ரசிகர்கள் அனைவரும், அதற்கான விடையையும் தாங்களே தேடி திருப்திப்பட்டுக் கொண்டிருந்தனர், படம் அறிவித்த நாளிலிருந்து.
இந்தப் படத்தைப் போல வேறு எந்தப் படத்துக்கும் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட டிசைன்கள் வெளியானதில்லை. ஒவ்வொரு போஸ்டருமே அத்தனை தொழில்முறை நேர்த்தியுடன் வந்தன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட டிசைன்களை ரசிகர்கள் உருவாக்கி வந்தனர்.
இந்த நிலையில் புதன்கிழமை மாலையே கபாலி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் வெளியாகிவிட்டன. பத்திரிகைளுக்கும் அனுப்பப்பட்டன. ரஜினியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த முதல் தோற்றப் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.
இந்த போஸ்டர்கள் வெளியான அடுத்த நொடியே திரையுலகம் காணாத அளவுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றன. ரசிகர்கள் யாரும் யோசிக்காத வகையில் முற்றிலும் வித்தியாசமாக இந்த போஸ்டர்கள் அமைந்துவிட்டன.
இந்த போஸ்டர்கள் சமூக வலைத் தளங்களையும், பொது ஊடகங்களையும் கலக்கி வருகின்றன. ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவற்றில் பலரும் கபாலி ரஜினி போஸ்டரையே தங்கள் அடையாளப் படங்களாக மாற்றிக் கொண்டனர்.
ட்விட்டரில் தொடர்ந்து இரு தினங்கள் உலகளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது கபாலி பெயர். டிசைன்கள் வெளியான இரண்டாம் நாளில் கூட 33.5 ஆயிரம் ட்வீட்கள் கபாலி பற்றியே இருந்தன. இதுவரை எந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குக்கும் கிடைக்காத வரவேற்பு இது. சர்வதேச அளவில் எந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் இப்படி ட்ரெண்டிங் ஆனதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment