32 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் ரஜினி!

|

32 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரைக்கு வந்த ரஜினி, அழகிரி மகன் திருமண நிகழ்ச்சியில் அதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
ரஜினி சூப்பர் ஸ்டாராக உயர்ந்து கொண்டிருந்த நேரத்தில், உணவு உறக்கமின்றி ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தொடர்ந்து நடித்திருக்கிறார். சில நாள்களில் 24 மணிநேரமும் கண்விழித்து ஷூட்டிங்கில் இருந்தாராம். இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. மனநலமும் பாதித்தது.
மதுரையில் படப்பிடிப்புக்கு வந்தபோதுதான் அவர் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரு மாத ஓய்வுக்குப் பிறகே மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்றார். இதனை அவர் இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராகிவிட்ட பிறகும் மறக்காமல் குறிப்பிடுவது வழக்கம்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் மதுரைக்குச் செல்லவில்லை. இத்தனைக்கும் அவருக்கு மதுரையில்தான் எக்கச்சக்க ரசிகர் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது 32 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக மதுரைக்குச் சென்றுள்ளார் ரஜினி.
அழகிரி மகனை வாழ்த்தி அவர் பேசுகையில், “எனக்கும் இரண்டு பேரன்கள் உள்ளனர். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இப்படியொரு சந்தோஷம் இருப்பதை பேரன்கள் பிறந்த பிறகுதான் உணர முடிஞ்சது.
பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து பேரக் குழந்தைகளைப் பார்ப்பது பெரிய சந்தோஷம்னா, பேரக் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது அதைவிடப் பெரிய சந்தோஷம்.
முதல்வர் கலைஞர் அந்த வகையில் பேரன்களின் திருமணத்தை நடத்தி வைத்து நிறைந்த வாழ்க்கை வாழ்கிறார்.
32 ஆண்டுகளுக்குப் பிறகு நான் மதுரைக்கு வருகிறேன்… எனக்கு மிகுந்த உற்சாக வரவேற்பை அளித்தனர். நன்றி.
பொருத்தம், லட்சணம், அழகு மூன்றும் நிறைந்த இந்த தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டும், விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும்”, என்றார் ரஜினி.
 

Post a Comment