ஜெமினி கணேசன்-90:சென்னையில் விழா!

|

Gemini Ganesan
காதல் மன்னன் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட ஜெமினி கணேசனின் 90வது பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் சென்னையில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த டிவிடியை முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.
இதுதொடர்பாக ஜெமினி கணேசனின் மகளும், பிரபல மருத்துவருமான டாக்டர் கமலா செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எங்கள் அப்பாவின் 90வது பிறந்தநாள் விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் 21ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு ஜெமினியின் வாழ்க்கை வரலாறு டி.வி.டி.யை வெளியிட்டு பேசுகிறார். டி.வி.டி.யின் முதல் பிரதியை டைரக்டர் கே.பாலச்சந்தர் பெற்றுக்கொள்கிறார்.

Kamal Haasan Launches Gemini Ganesan Biography Stills, Photo Gallery

 ஜெயஸ்ரீ விஸ்வநாதனால் ஏற்கனவே தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட எங்கள் தந்தையின் வாழ்க்கை வரலாறு புத்தகமான வாழ்க்கைப் படகு தற்போது ஏராளமான புகைப்படங்கள் சேர்த்து மறுமதிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த புத்தகத்தையும் முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார். முதல் பிரதியை கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொள்கிறார்.
விழாவில், கணேஷ் பிரபா இசைக்குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திரைப்பட பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வாணிஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரி, ஏ.எல்.ராகவன் ஆகியோர் கலந்துகொண்டு ஜெமினி கணேசனின் பழைய பாடல்களை பாடுகிறார்கள்.
திரையுலகில் காதல் மன்னனாக வலம்வந்த எங்கள் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு, சுயமுயற்சியினால்தான் புகழை அடைந்தார். பொதுவாக அவர் கஞ்சன் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். நாங்கள்கூட அப்படித்தான் நினைத்தோம்.
ஆனால், அவர் குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் ஏராளமான தான தர்மங்கள் செய்திருக்கிறார். நிறைய பேரை படிக்க வைத்திருக்கிறார். அவர் மறைந்த பிறகு, மற்றவர்கள் சொல்லித்தான் இது எல்லாம் எங்களுக்கு தெரிய வந்தது. அவர் இல்லாதபோதுதான் அவருடைய பெருமை எங்களுக்கு தெரிகிறது என்றார் உணர்ச்சிவசப்பட்டு.
 

Post a Comment